×

தாம்பரம் மாநகராட்சியில் 2ம் கட்ட குடும்ப கணக்கெடுப்பு பணி தொடக்கம்: மே மாதம் இறுதி வரை நடக்கிறது

தாம்பரம், பிப்.19: தமிழ்நாட்டில் முதன்முறையாக தாம்பரம் மாநகராட்சியில் குடும்ப கணக்கெடுப்பு 2ம் கட்ட பணிகள் துவங்கப்பட்டு வரும் மே மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் பொது சுகாதார சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில், குடும்ப கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது.

87.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தாம்பரம் மாநகராட்சியில், 5 மண்டலங்கள் மற்றும் 70 வார்டுகள் உள்ளது. தற்போது மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2,85,566 குடியிருப்புகளும் 10,30,958 மக்கள் தொகையும் உள்ளது. தற்போதுள்ள தாம்பரம் மாநகராட்சியில் 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 76 துணை சுகாதார மையங்கள் மற்றும் 18 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் மாநகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் யூஎன்ஐசிஇஎப் நிறுவனத்துடன் இணைந்து, குடும்ப கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்னனு குடும்ப பதிவேடு உருவாக்கப்பட்டு, சேவை பகுதிகளை வரையறை செய்து, பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய பொது சுகாதார சேவைகளை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இக்கணக்கெடுப்பு பணி தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தாம்பரம் மாநகராட்சியில் முன்னோடி திட்டமாக செயப்படுத்தப்படுகிறது.

இக்கணக்கெடுப்பின் மூலம் வீட்டு விவரம், ஆதார் எண், கைபேசி எண், குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு, சொத்து வரி விவரம், குடும்ப விவரம், கல்வி, தொழில், குழந்தைகளின் தடுப்பூசி விவரம், மகப்பேறு மற்றும் குடும்ப நல விவரம், நோய் பாதிப்பு விவரம், கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளின் விவரம் போன்றவை சேகரிக்கப்படுகிறது. முதற்கட்ட கணக்கெடுப்பு பணி மார்ச் 2025 முதல் ஜூலை 2025 வரை மண்டலம் 1ல் உள்ள 14 வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு, 34,794 குடும்பங்களின் விவரங்களை சேகரித்து 54 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி நேற்று (18ம் தேதி) முதல் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தொடங்கப்பட்டு, மே மாத இறுதி வரை நடைபெறவுள்ளது.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்கணக்கெடுப்பாளர்களுக்கு மாநகராட்சியால் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கணக்கெடுப்பு குறித்த தகவல்கள், சந்தேகங்களுக்கு 18004254355, 18004251600 ஆகிய மாநகராட்சி உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, பொதுமக்களாகிய தாங்கள் உரிய தகவல்களை வழங்கி, இக்கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Tamil Nadu ,
× RELATED சிங்கப்பெருமாள்கோவிலில் நாளை கொள்முதல் செய்வோர் சந்திப்பு கூட்டம்