×

சுத்திகரிப்பு தொட்டியில் கழிவுநீர் ஊற்றிய லாரி சிறைபிடிப்பு: மாமல்லபுரம் ஆணையர் நடவடிக்கை

மாமல்லபுரம், பிப்.18: மாமல்லபுரம் நகராட்சியில், கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் அனுமதியின்றி கழிவுநீர் ஊற்றிய லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமல்லபுரம் ஆணையர் தெரிவித்தார். மாமல்லபுரம் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, நகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் பூஞ்சேரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மரம், செடி-கொடிகளுக்கு தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாமல்லபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக சில இடங்களில் ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

மாமல்லபுரம் நகராட்சிக்கு கடந்த மாதம் ஆணையராக பொறுப்பேற்ற வித்யாக்கு கடந்த சில நாட்களாக கல்பாக்கம் சாலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் அனுமதியின்றி லாரிகள் மூலம் கழிவுநீர் ஊற்றுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்நிலையில், ஆணையர் உத்தரவின் பேரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி மற்றும் நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது, கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் அனுமதியின்றி கழிவுநீர் ஊற்றுவது தெரிந்தது. பின்னர், அந்த லாரியை மடக்கி பிடித்து துப்புரவு ஆய்வாளர் குருசாமி மாமல்லபுரம் போலீசில் ஒப்படைத்தார். கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் அனுமதியின்றி கழிவுநீர் ஊற்றும் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சிடப்பட்ட பெயர் பலகை வைக்க ஊழியர்களுக்கு ஆணையர் வித்யா அறிவுறுத்தினார்.

Tags : Mamallapuram ,Commissioner ,Mamallapuram Municipality ,Mamallapuram Commissioner ,Mamallapuram Municipality.… ,
× RELATED லத்தூர், சித்தாமூர், அச்சிறுப்பாக்கம்...