காஞ்சிபுரம், பிப்.19: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 137 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் அதிகாரிகளுக்கான முதற்கட்ட பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுததேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபட நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகளுக்கான முதற்கட்ட பயிற்சி கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடந்தது.
மேலும், நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலந்தூர், உத்திரமேரூர், பெரும்புதூர் (தனி) மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் முறையே 39, 36, 28 மற்றும் 34 என மொத்தம் 137 மண்டல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகளுக்கான முதற்கட்ட பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இப்பயிற்சி கூட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, சாய்வு தளம் போன்ற அடிப்படை வசதிகள் அமைந்துள்ளதை சரிப்பார்க்க அறிவுறுத்தப்பட்டது. வாக்குப்பதிவு முந்தைய நாள் செய்ய வேண்டிய கடமைகள், வாக்குப்பதிவு நாள் அன்று செய்ய வேண்டிய கடமைகள் போன்றவை பயிற்சி வகுப்பில் எடுத்துரைக்கப்பட்டன.
மேலும், பதற்றமான மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடி மையங்ளில் தனி கவனம் செலுத்தி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேற்படி, நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு அடுத்த கட்ட பயிற்சி கூட்டங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெறும். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், காஞ்சிபுரம் சப்-கலெக்டர்ஆஷிக் அலி, பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் மண்டல அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
