×

சிறுநீரகம், சிறுநீர் நோய்களுக்கு மூலிகை மருத்துவம்!

நன்றி குங்குமம் டாக்டர்

சிறுநீரகக் கோளாறுகள், சிறுநீரகக் கற்கள், சோகை நோய், சிறுநீர் தாரை பிரச்னை மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் புரொஸ்டெட் சுரப்பிக் கோளாறுகள் போன்ற பல காரணங்களால் சிறுநீரக பிரச்னை மற்றும் சிறுநீர் நோய்கள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற சிறுநீர் நோயுள்ளவர்களுக்கு சில நோய் அறிகுறிகள் காணப்படும். இந்த அறிகுறிகள் உணரும்போது சிறுநீர் நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதை குணப்படுத்த வேண்டும். மாறாக நோயின் காரணத்தை ஆராயாமல், வெறுமனே பரிசோதித்துவிட்டு பிரச்னைக்கான மருந்துகளை மட்டும் எடுத்துக் கொண்டால் பிரச்னை மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அந்தவகையில், ரத்தசோகை நோயில் வேண்டுமானால் காரணத்தை ஆராயாமல் சிகிச்சை தருவது பயனளிக்கலாம். ஆனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டாலோ அல்லது புரொஸ்டேட் சுரப்பி பாதிப்படைந்தாலோ வெறுமனே மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்தால் பலன் தராது. அதன்பிறகு, அறுவை சிகிச்சை அல்லது டயாலசிஸ் எனப்படும் முடிவற்ற சிகிச்சையே முடிவாகிப் போகும்.

அதனால், இதுபோன்ற சிறுநீரக பிரச்னைகளுக்கு மாற்று மருத்துவ (மூலிகை மருத்துவம்) முறைகளில் அனுபவமிக்க மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் குணப்படுத்த முடியும்.

சிறுநீரில் குறைபாடுகள்

சிறுநீர் நோய்கள் என்று எப்படி கண்டுபிடுப்பது என்றால் கீழே குறிப்பிட்டுள்ள நோய்க் குறிகள் காணப்பட்டால் அவற்றைச் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் எனலாம்.அதாவது, சாதாரணமாக இருந்த முகத்தில் கண்களுக்குக் கீழே வீக்கமாகக் காணப்படுவது.

*பசியின்மை, சோகை நோய்

*உடலின் பல்வேறு பகுதிகளில் வீக்கம் ஏற்படுவது.

*சிறுநீர் குறைவாகவும், வலியும் ஏற்படுவது

*சிறுநீர் கழிக்கும்போது விட்டுவிட்டுப் போவது அல்லது போகும்போது தடையுண்டாவது.

*சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் போவது

*சிறுநீரில் வெள்ளை நிறமாக மாவு போல படிந்து காணப்படுவது.

*சிறுநீரைப் பரிசோதித்துப் பார்த்தால் அல்புமின் எனப்படும் உப்பு காணப்படுவது.

*சிறுநீர் தெளிவாக இல்லாமல் கலங்கலாகத் தோன்றுவது.

*அடிவயிற்றுக் கீழே வலியோடு கலங்கலான சிறுநீர் போவது.

*சிறுநீர் போவதில் சிரமம் ஏற்படுவது

*கடுமையான இடுப்புவலி.

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரக வலி சிறுநீர் போகும்போது சிறுகற்கள் வெளிப்படுவது. அதனால் கடுமையான வலியுண்டாவது இதற்கு முன்னதாக நோயாளி தமக்கு அடிவயிற்றில் வலியுண்டாவதாகக் கூறுவார். அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். அப்போது சிறுநீரில் ரத்தம் போவது தெரியும். சிறுநீரில் கற்கள் வெளிப்படும்போது சிறுநீரகம் அல்லது மூத்திரப்பையில் கடுமையான வலியுண்டாகும். வியர்க்கும், உடலில் சூடு அதிகரிக்கும் நாடித்துடிப்பு வேகமாக இருக்கும். கல் வெளியேறியவுடன் வலி குறைந்துவிடும். இதுபோன்ற அறிகுறிகள் தென்படும் போதே அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் குணமாகும்.

சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது விரைவில் பிரச்னைகள் குறைந்து குணமாகும்.

கார்போக அரிசி: சிறுநீர் பெருக்கும்.

ஓமம்: சிறுநீர் கோளாறுகளுக்குப் பயன்படுகிறது. சிறுநீரகம் பாதிப்புகளுக்கும் பயன்படும்.

சதாவரிக் கிழங்கு: சிறுநீரகத்திற்குப் பயன்படும்.

துளசி: சிறுநீர்க் கோளாறுகளுக்குப் பயன்படும். விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மூக்கரட்டை: சிறுநீர் பெருக்கும். வீக்கம் குறைக்கும். பாண்டு நோயில் முகம், கைகால்கள், வயிறு வீக்கம் கண்டிருந்தால் மூக்கரட்டை வீக்கத்தைப் போக்கும்.

புரொஸ்டேட் சுரப்பிக் கோளாறுகளுக்கு..

வெள்ளரி, வெங்காயம், கேரட், முட்டைகோஸ்சாறு என தினசரி ஒன்றை உண்டு வர விரைவில் பிரச்னை குணமாகும்.

முள்ளங்கி: முள்ளங்கித் தண்டுகளை நாம் சாப்பிடுகிறோம். அதன் இலைகளை எறிந்துவிடுவோம். ஆனால் சீனர்கள், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் மக்கள் தண்டுகளை எறிந்து விட்டு இலைகளைப் பச்சையாகச் சாப்பிடுகின்றனர். முள்ளங்கி கீரை சிறுநீரக கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகிறது.

குணம்

சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் அவற்றை வெளியேற்றிவிடும். இதில் வைட்டமின் சி சத்து மிகுந்துள்ளது. வாயுவகற்றி, சளியை வெளியேற்றும்.

செய்முறை

முள்ளங்கியின் வேர், விதைகள், இலைகள், தண்டுகள் இவற்றைச் சாறு பிழிந்து சாப்பிடலாம். வேர்களைக் காய வைத்து எடுத்து அரைத்துத் தூளாக்கிச் சாப்பிடலாம். கஷாயமிட்டுக் குடிக்கலாம்.

குணமாகும் நோய்கள்

சிறுநீரகக் கோளாறுகள் எதுவாக இருந்தாலும் முள்ளங்கித் தண்டுச்சாறு குடித்தால் பயன் கிடைக்கும்.சிறுநீர் கழிப்பதில் சிரமம். அதாவது சிறுநீர் வராமல் இருந்தால் (அடைப்பு காரணமாக) முள்ளங்கி இலைச் சாற்றைக் குடித்தால் குணமாகும். கற்கள் இருந்தால் வெளியேறும்.சிறுநீர் குறைவாக வெளியேறினால், முள்ளங்கி விதைகளைத் தூளாக்கி சாப்பிடலாம்.

தொகுப்பு: மருத்துவர். ஜி.லாவண்யா

Tags : Kumkum ,
× RELATED பாத பராமரிப்பு!