திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் முகம்மது சுஹைல் அன்சாரி. இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர். இவருக்கும், பத்தனம்திட்டா மாவட்டம் ஏனாத்து பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு இளம்பெண்ணுடன் தகாத உறவு இருந்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2 பேரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்தனர். அப்போது ஏற்பட்ட பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து 2 பேரும் பலமுறை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த கள்ளக்காதல் விவகாரம் அந்த இளம்பெண்ணின் கணவனுக்கு தெரியவந்தது. இதனால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு அந்த இளம்பெண், கணவனின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஏனாத்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் தற்கொலைக்கு முன் இளம்பெண் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், தன்னுடைய தற்கொலைக்கு முகம்மது சுஹைல் அன்சாரிதான் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் கைது செய்யப்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
