ஜாஜ்ஜார்: அரியானாவில் காதலர் தினத்தை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய போது கர்ப்பிணி மனைவியை கணவரே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த மஹக் கதுரியா (27) என்பவர், அங்குள்ள தனியார் வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் தணிக்கையாளரான அன்ஷுல் தவான் என்பவருக்கும் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. தற்போது மஹக் கதுரியா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தனது மனைவியின் நடத்தை மீது கணவர் அன்ஷுல் தவான் தீராத சந்தேகம் கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே குடும்பப் பிரச்னை இருந்தது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி, தம்பதிகள் காதலர் தினத்தை ஹிசாரில் கொண்டாடிவிட்டு காரில் குருகிராம் நோக்கித் திரும்பினர்.
அப்போது கடந்த 15ம் தேதி இரவு ஜாஜ்ஜார் அருகே கார் சென்றபோது, அன்ஷுல் தவான் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, கத்தரிக்கோலால் அவரது தொண்டையை அறுத்து பாசூர் கிராமத்தின் அருகே உள்ள வறண்ட கால்வாயில் உடலை வீசியுள்ளார். பின்னர் போலீசாருக்கு போன் செய்த அவர், ‘மர்ம நபர்கள் எங்களை வழிப்பறி செய்து எனது மனைவியை கொன்றுவிட்டனர்’ என்று பொய்யாக நாடகமாடினார். போலீசார் நடத்திய 18 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர் தனது கொடூர குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
