நன்றி குங்குமம் டாக்டர்
உடல் ஆரோக்கியம் பேணிக் காப்பது மிகவும் இன்றியமையாததாகும். அதற்கு நம் அன்றாட பழக்கவழக்கங்களில் உடல் நலத்திற்கு உகந்தவற்றை மேற்கொள்வதும், தீங்கு விளைவிப்பதை தவிர்ப்பதும் சிறந்தது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் அமுதா தேவி. மேலும், அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
உடல் நலத்தைக் காக்க உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, நோய் ஏற்படும் போது சரியான சிகிச்சை எடுப்பது ஆகியவை அடங்கும். அவற்றுள் மிக முக்கியமானது உணவுப் பழக்கம். அதையே உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.அதனால், உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும் சிறந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது.
சிறிய வயதிலேயே ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் பழக்கத்தை குழந்தைகளிடையே ஏற்படுத்துவது அவர்களின் வாழ்நாள் முழுவதும் நலமாக இருக்க உதவும் அடித்தளமாக அமையும். எனவே, பொரித்த உணவுகளின் தன்மைகள் மற்றும் அவற்றால் உண்டாகும் தீமைகள் குறித்து காண்போம்.
உணவை பொரித்து உண்பது தற்போது வீடுகளில் வழக்கமான ஒன்றாக உள்ளது. உணவகங்களிலும் மற்றும் கடைகளிலும் அதிகப்படியாக பொரித்த உணவுகள் கிடைக்கப் பெறுகிறது.இளம் வயதினரிடையே பொரித்த உணவுகள், பீட்சா, குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் எடுப்பது நாகரீகமாக கருதப்படுகிறது. அவர்கள், ஊடகங்களில் வரும் துரித உணவுகள் சார்ந்த விளம்பரங்களாலும், தன் சக நண்பர்களாலும் இத்தகைய உணவுகளை உட்கொள்ள விரும்புகின்றனர்.
வெளியூர்களில் கல்லூரிகளில் படிக்கும் இளம்வயதினர் அதிகமாக உணவகங்களில் இதுபோன்ற உணவுகளை சாப்பிட நேரிடுகிறது. மேலும், இளம் வயதினர் மிகவும் குறைவான அளவே பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்கின்றனர். உடற்பயிற்சி மேற்கொள்வதும் குறைவே. இவை அனைத்தும் அவர்களின் வருங்கால ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும். பொரித்தல் என்பதுஎண்ணெயை 160 டிகிரி – 180 டிகிரி கொதிக்க வைத்து, அதில் உணவுப் பொருள் சமைக்கப்படுகிறது. அதிக கொதி நிலையில் சமைப்பதால் உணவு வேகமாக சமைக்கப்படுகிறது. எனவே, உணவுப் பொருள் மொறு மொறு வென்று சுவைமிகுந்து காணப்படுகிறது.
இதனால் உணவுப் பொருளில் அதிக எண்ணெய் உறிஞ்சபட்டு, அதன் கலோரி அளவு அதிகரிக்கிறது. உதாரணமாக, 100 கிராம் எடையுள்ள ஒரு சிறிய வேகவைத்த உருளைக்கிழங்கில் 100 கிராம்ககிலோரிகளும் அதே அளவு 100 கிராம் வறுத்த உருளைக்கிழங்கில், 300 கலோரிகளும் 20 கிராம் கொழுப்பும் உள்ளது. இதனால், பொரித்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகள் உடல் எடை கூடி பருமனாகின்றனர்.
உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு புற்றுநோய், ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் உட்கொள்பவர்களுக்கு உடல் எடை சீராக இருப்பதோடு புற்றுநோய், ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.பொரித்த உணவுகளை வாரத்திற்கு ஒருமுறை எடுப்பவருக்கு இருக்கும் உடல் நல பாதிப்புகான வாய்ப்பை விட பலமடங்கு அதிக உடல் நல பாதிப்பிற்கான வாய்ப்பு அடிக்கடி பொரித்த உணவுகளை எடுப்பவருக்கு ஏற்படுகிறது.
மேலும், பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.இதனால், கருவில் இருக்கும் குழந்தைக்கு எடை அதிகமாதல், குறைப்பிரசவம், மூச்சுத்திணறல், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் கோளாறு பின்னாளில் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் உண்டாகிறது.பொரித்த உணவுகளில் அதிக கொழுப்புச்சத்து உள்ளதால், அவற்றை ஜீரணப்பதில் சிரமம் ஏற்பட்டு வயிற்றுவலி, பசியின்மை, நெஞ்செரிச்சல், வாந்தி போன்று உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற நொறுக்குதீனிகள் கடைகளின் அன்றாடம் சாப்பிடும் வழக்கம் உள்ள குழந்தைகள் ஜீரணக் கோளாறு ஏற்பட்டு குழந்தைப் பருவத்திலேய வயிற்றுயே புண், வயிற்றுவலி போன்ற உடல் நல குறைபாட்டால் அவதியுறுகின்றனர்.இதனால் அவர்கள் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. பள்ளி செல்ல முடியாமல் அவர்களுடைய பள்ளிக் கல்வியும் பாதிக்கப்படுகிறது. மேலும், எண்ணெயை அதிக வெப்ப நிலையில் கொதிக்க வைக்கும்போது டிரான்ஸ் கொழுப்பு (டிரான்ஸ் ஃபேட்) அதில் உருவாகிறது.
இந்த டிரான்ஸ் ஃபேட் என்பது செரிமானம் செய்வதற்கு கடினமானதாக இருக்கிறது. மேலும், டிரான்ஸ் கொழுப்பு இதயநோய், நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.இது போன்ற உணவுகளை குழந்தைப் பருவத்தில் இருந்தே சாப்பிடும் போது, அவர்களுக்கு இது போன்ற நோய்கள் அவர்களின் இளமைப் பருவத்திலேயே வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. மொத்த உணவுகளில் ப்ரீ ராடிகல்ஸ் அதிகமாக இருக்கிறது. இதை உடலில் உள்ள செல்களின் டி என் ஏவை சேதப்படுத்தும். மேலும், வேகமாக உடலை முதுமை அடையச் செய்யும் மட்டுமல்லாமல் டிமென்சியா (ஞாபக மறதி), இருதய நோய், சுவாசக் கோளாறு, செரிமான நோய், புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்.
பொரித்த உணவுகளில் அக்ரிலாமைடு என்ற வேதிப் பொருள் உருவாகலாம். இது சிறுநீரகம் மற்றும் கருப்பை புற்று நோய்களை உருவாக்கக் கூடியது. உணவு என்பது சுவைக்காக மட்டுமே என்பதை விடுத்து ஆரோக்கியமும் சுவையும் சேர்த்து இருக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.துரித உணவு பழக்கவழக்கத்தையும் மாற்ற ஆரோக்கியமான உணவு வகைகள் உட்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பழங்கள், வேகவைத்த காய்கறிகள், சாலட்கள், கீரை வகைகள், சிறுதானிய உணவுகள் எடுத்துக் கொள்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.
நம் நாட்டு தின்பண்டங்களான எள்ளுருண்டை கடலை உருண்டை, வேக வைத்த வேர்க்கடலை, வேக வைத்த சுண்டல் வகைகள், உளுந்தங்கஞ்சி, சிறுதானிய கொழுக்கட்டை வகைகள் போன்றவற்றை குழந்தைகளும், இளம் வயதினரும் எடுத்துக் கொள்ள பெற்றோர் முன் உதாரணமாக செயல்பட வேண்டும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நன்மை பயக்கும் உணவுகள் பற்றி உணவுப் பழக்கங்கள், உணவு பொருட்கள் பற்றி கண்காட்சி, சமையல் போட்டிகள், உணவு பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.துரித உணவுகளால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாகரிகம் என்பது ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது என்பதை ஒவ்வொருவரும் உணரும் நாளே சிறந்த நாளாக விரைவாக அமையும்.
குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி
