×

அறிவிப்பு வெளியான பின்பும் ரயில்வே கேட் மூடப்படாததால் வாகனஓட்டிகள் குழப்பம்

திருப்பூர், பிப்.16: திருப்பூர் அருகே திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளை இணைக்க கூடிய முக்கிய பகுதியாக கேட்டு தோட்டம் ரயில்வே கேட் உள்ளது. இப்பகுதியில் பனியன் நிறுவனங்களுக்கான சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்கள் முதல் பல்வேறு சேவைகளுக்கும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் இப்பகுதியில் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பிப்ரவரி 15 முதல் 17ம் தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு கேட் மூடப்பட்டிருக்கும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பைத்தொடர்ந்து, நேற்று காலை அப்பகுதிக்கு வந்த வாகன ஓட்டிகள் கேட் மூடப்பட்டிருக்கும் என எதிர்பார்த்து மாற்று வழிகளில் சென்றனர்.ஆனால் அறிவிக்கப்பட்டபடி நேற்று பணிகள் தொடங்கப்படாமலும் கேட் மூடப்படாமலும் இருந்தது. ஆனால் கேட்டுத்தோட்டம் பகுதியில் ரயில்வே கேட் அருகில் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை கேட் மூடப்பட்டிருக்கும் மாற்றுப்பாதையில் செல்லவும் என்ற நோட்டிசில் எந்தவித மாற்று அறிவிப்பும் இல்லாமல் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். ரயில்வே நிர்வாகத்தின் இந்த தெளிவற்ற அறிவிப்பால் பணிகளுக்காக கேட் எப்போது மூடப்படும் என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளாகினர். பணிகள் தள்ளிவைக்கப்பட்டதா? அல்லது வேறு தேதியில் நடைபெறுமா? என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் முறையான விளக்கத்தை அளிக்கவில்லை எனவும் முறையாக பணிகளை திட்டமிட்டு அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Tags : Tiruppur ,Kettu Thottam ,Tiruppur North ,South ,
× RELATED 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்