ஊட்டி, பிப். 11: ஊட்டியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் நீர்பனிப்பொழிவு துவங்கும். தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் உறைபனி விழத்துவங்கும். டிசம்பர் மாதம் முதல் கடும் உறைபனி காணப்படும். இந்த உறைபனியின் தாக்கம் தொடர்ந்து மூன்று மாதங்கள் நீடிக்கும். மார்ச் மாதம் முதல் வாரம் வரை பனியின் தாக்கம் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கம் முதலே நீர் பனியின் தாக்கம் காணப்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக மீண்டும் ஊட்டியில் உறைபனியின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. இதனால், மலர் செடிகள், தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறி செடிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைத்துறையினர் தற்போது முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
