×

தமிழகத்தை கபகளீகரம் செய்ய துடிக்கும் கூட்டத்துக்கு இரையாகக் கூடாது: திமுக-காங்கிரஸ் இடையே சுமுகமான உறவு; கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது; முற்றுப்புள்ளி வைத்த செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு திமுக இரு மொழிக் கொள்கை குறித்தும், இந்தி திணிப்பு குறித்தும் பேசலாமா என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். அவர் ஒரு முதல்வராக இருந்தவர், எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர். கொஞ்சம் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். அவர் படிக்கிறது இல்லை. யாரோ எழுதிக் கொடுப்பதை பேசுகிறார். அவருக்கு எப்படி வரலாறு தெரியும். இருமொழி கொள்கை ஜவஹர்லால் நேருவால் கொண்டு வரப்பட்டது. இந்த வரலாறு தெரியாமல் யார் யாரோ சொல்கிறார்கள் என யாரோ எழுதிக் கொடுத்ததை படிக்கிறார். எடப்பாடி பழனிசாமியை பாஜ இயக்குகிறது. அவரை ஆட்டி படைக்கிறது. பாஜவை தவிர டெல்லியை தவிர அவரால் எதையும் செய்ய முடியாது. ஆகையால் எதை பேச வேண்டும் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு உலக நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொண்டு பேச வேண்டும். பொறாமை, வயிற்று எரிச்சலில் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார். எங்கள் அகில இந்திய தலைமை மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் கூட்டணி குறித்து வெளியில் யாரும் பேச வேண்டாம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். நானே பொதுவெளியில் பேசுவதில்லை. கட்சியினர் யாரும் கூட்டணி குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும். ஒரு சுமுகமான நல்லுறவு இருக்கும் போது தமிழக மண்ணில் கால் ஊன்றலாமா?, தமிழ்நாட்டை கபகளீகரம் செய்யலாமா என்று துடிக்கின்ற கூட்டத்திற்கு எந்த விதத்திலும் நாம் இரையாகக் கூடாது என்பது என் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,DMK ,Congress ,Selvapperundhagai ,Chennai ,Edappadi Palaniswami ,
× RELATED ஓட்டு முக்கியம் குமாரு… மாஜிக்கள் அலப்பறை