×

திமுகவை தவிர யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சிதான்: மோடியை நினைச்சு எங்களுக்கு ஓட்டு போடாம இருந்திடாதீங்க..

திண்டுக்கல்லில் எம்விஎம் அரசு மகளிர் கலைக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து நேற்று ஆதரவு தெரிவித்தார். அப்போது, அவர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ‘‘சகோதரி… மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம்னு சொல்லிடாதீங்க…’ என கூறினர். திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு பேசியபோது, அவருடன் வந்திருந்த சில பாஜ கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கவுரவ விரிவுரையாளர்கள் 9ம் தேதி முதல் போராடி வருகின்றனர். ஒன்றரை அமாவாசை முடிந்து பவுர்ணமி வருவதற்குள் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். உங்களது கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என எடப்பாடி பழனிசாமி சார்பில் கூறிக்கொள்கிறேன்’’ என்றார். அப்போது செய்தியாளர்கள், ‘‘கவுரவ விரையுரையாளர்கள் 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருந்தது. ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையே ஏன்’’ என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ‘‘இது யாருடைய கவனத்திற்கும் தெரியவில்லை. தற்போது தான் என்னை அழைத்துள்ளனர். அப்போதே எங்களிடம் கூறியிருந்தால், அவர்களின் கோரிக்கையை செய்து கொடுக்க வந்துள்ளோம். கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். ‘‘தமிழகத்தில் திமுகவை தவிர யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே…’’ என்ற கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன், ‘‘டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துட்டு போகட்டுமே. ரயில் நிலையம் மற்றும் பத்து ரயில்கள் வேண்டுமென்றால் டெல்லியில் தான் கேட்க வேண்டும். தமிழிசை சவுந்தரராஜன், விஜய்க்கு அழைப்பு கொடுத்தது குறித்து கேட்கிறீர்கள். திமுகவிற்கு எதிராக உள்ள அனைவரையும் கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தவறு இல்லை’’ என்றார்.

Tags : DMK ,Delhi government ,Modi ,Former ,AIADMK ,Minister ,Dindigul Srinivasan ,MVM Government Women's Arts College ,Dindigul ,
× RELATED ஓட்டு முக்கியம் குமாரு… மாஜிக்கள் அலப்பறை