×

தலைவன் நடிப்பு அப்படியே இருக்கு… விஜய் கட்சியில சேலத்துல ஒரு அடிமை: இதுதான் சுயமரியாதையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சேலத்தில் நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலக திறப்பு நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர் தமிழன் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திறப்பு விழாவிற்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னர் அங்கு நடந்த நிகழ்வு தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. செய்தியாளர் சந்திப்பிற்கு ஒரு சோபா போடப்பட்டு செய்தித் தொலைக்காட்சிகளின் மைக்குகள் எல்லாம் வைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த புஸ்ஸி ஆனந்திடம் தமிழன் பார்த்திபன், ‘‘நீங்கள் சோபாவில் உட்காருங்கள்’’ எனக் கூறினார்.

அப்போது புஸ்ஸி ஆனந்த், ‘‘நீங்கள் உட்கார்ந்து பேசுங்கள்’’ என கூறித் தமிழன் பார்த்திபனை அழைக்க, அதை மறுத்த பார்த்திபன் ‘‘நீங்கள் பேசுங்கள், நான் கீழே உட்கார்ந்து கொள்கிறேன்’’ எனச் சொல்லி சடாரென தரையில் உட்கார்ந்து விட்டார். பிறகு இரண்டு சோபாக்கள் போடப்பட்டு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதுள்ள மரியாதையின் காரணமாக, அவர் நிற்கும்போது தான் சோபாவில் உட்கார முடியாது; அதனால் அவரை சோபாவில் உட்கார வைக்க பார்த்திபன் தரையில் உட்கார்ந்ததாக கூறப்படுகிறது.

‘‘தலைவன் நடிப்பு அப்படியே இருக்கு. நான் புஸ்ஸி ஆனந்த் விசுவாசி என்பதைக் காட்டவும் நல்ல பெயர் எடுக்கவும் கட்சிப் பதவியில் தன்னைவிட மேல்நிலையில் உள்ள நிர்வாகியிடம் சுயமாரியாதையை இழந்து அடிமையாக இப்படிச் செய்யும் ஒரு மாவட்டச் செயலாளர், தனக்கு அடுத்த நிலையில் உள்ள நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் இதை எதிர்பார்க்கும் வாய்ப்புள்ளது. தந்தை பெரியாரை தங்களின் கொள்கை தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சியின் மாவட்டச் செயலாளருக்கே சுயமரியாதை குறித்த புரிதல் இல்லை. இதுபோன்ற செயல்கள் இவ்வளவு ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் சுயமரியாதை அரசியலுக்கு எதிர்திசையில் பயணிக்கும் பிற்போக்குத்தனமானது’’ என்று வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Tags : Vijay ,Salem ,Tamil Nadu Victory Party ,General Secretary ,Pussy Anand ,District Secretary ,Tamizan Parthiban ,
× RELATED ஓட்டு முக்கியம் குமாரு… மாஜிக்கள் அலப்பறை