கொழும்பு: அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 67 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை டி20 தொடரின் 14வது போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நேற்று நடந்தது. அதில் ஆஸ்திரேலியா – அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் டிராவிஸ் ஹெட் 6, ஜோஷ் இங்லீஸ் 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பின் வந்தோரில் மேட் ரென்ஷா 37, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 45 ரன் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ஆஸி, 6 விக்கெட் இழந்து 182 ரன் விளாசியது. அதையடுத்து 183 ரன் இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது.
அதன் துவக்க வீரர் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 1 (காயத்துடன் வெளியேறினார்), ராஸ் அடேர் 12 ரன்னில் ஆட்டமிழந்து மோசமான துவக்கத்தை தந்தனர். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். ஜார்ஜ் டாக்ரெல் மட்டும் தாக்குப்பிடித்து 29 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 41 ரன் எடுத்தார். 16.5 ஓவரில் அயர்லாந்து 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால், 67 ரன் வித்தியாசத்தில் ஆஸி அட்டகாச வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். எல்லிஸ் ஆட்ட நாயகன்.
