×

சில்லி பாய்ன்ட்…

* டேபிள் டென்னிஸ் மனுஷ்-தியா இணை காலிறுதிக்கு தகுதி
சென்னை: டபிள்யுடிடி ஸ்டார் கன்டென்டர் 2026 டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் நேற்று இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சித்தலே இணை, கொரியாவின் ஓ சியுங்வான், கிம் சியோங்ஜின் இணையுடன் மோதியது. 42 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் அட்டகாசமாக ஆடிய இந்திய இணை, 10-12, 11-6, 12-10, 5-11, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடியது. இதையடுத்து மனுஷ் ஷா, தியா சித்தலே காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். கால் இறுதியில் இவர்கள், வைல்ட் கார்ட் மூலம் சிறப்பு நுழைவு பெற்று ஆடிவரும், இந்தியாவின் பயாஸ் ஜெயின், சிண்ட்ரெல்லா தாஸ் இணையுடன் மோதவுள்ளனர்.

* பிசிசிஐயை தாஜா செய்ய அமினுல் முயற்சி
டாக்கா: ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவில் ஆட மறுத்த வங்கதேச அணி உலகக் கோப்பை டி20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டு ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. இந்நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாம், வரும் 15ம் தேதி கொழும்புவில் இந்தியா – பாக் இடையிலான டி20 போட்டி நடைபெறும்போது, பிசிசிஐ அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார். இதற்கான ஏற்பாட்டை ஐசிசி செய்துள்ளது.

* துப்பாக்கி சுடுதலில் தோமருக்கு தங்கம்
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் போட்டியில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இப்போட்டியில் இந்திய வீரர்கள் நீரஜ் குமாருக்கு வெள்ளி, அகில் ஷியரோனுக்கு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. இம் மூன்று இந்திய வீரர்களும், குழு போட்டியில் 1769 புள்ளிகளுடன் தங்கம் வென்றனர்.

* ஆப்கன் வீரர்கள் விலகல் பிஎஸ்எல்லுக்கு பின்னடைவு
காபூல்: ஐபிஎல் போட்டிகளை போன்று பாகிஸ்தானில் நடத்தப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க, ஆப்கானிஸ்தானை சேர்ந்த வீரர்கள் முஜீபுர் ரஹ்மான், செதிகுல்லா அடல், முகம்மது நபி, வாகர் சலாம்கெல் ஃபசல் ஹக் பரூகி உள்ளிட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதற்கிடையே ஆப்கன் வீரர் ரஹ்மானுல்லா குர்பாசை, பெஷாவர் ஸால்மி அணி நேரடியாக ஒப்பந்தம் செய்தது. இதற்கு ஆப்கன் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பிஎஸ்எல் ஏலத்தில் பங்கேற்காமல் ஆப்கன் வீரர்கள் திடீரென விலகினர். இது, பாக். கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Manush ,Diya ,Chennai ,India ,Manush Shah ,Diya Sithale ,Korea ,Oh Seungwan ,Kim Seongjin… ,WTT Star Contender 2026 ,
× RELATED டி20 உலகக் கோப்பை: நமீபியா அணிக்கு...