காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகல்: அவருக்கு பதில் ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்ப்பு!

கொழும்பு: தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தல் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகினார். அவருக்கு பதில் ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நடைபெற்று வரும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவார் எனவும் மீதமுள்ள போட்டிகளில் ஸ்மித் அணியை தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடர் தொடங்கும் முன்பே காயங்களால் அவதிப்பட்டு வந்த ஆஸ்திரேலிய அணிக்கு, தற்போது கேப்டன் மிட்செல் மார்ஷின் உடல்நிலை பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் கேப்டனாக களம் கண்டார். பயிற்சியின் போது மார்ஷுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விளையாடவில்லை என்று முதலில் கூறப்பட்டது.

மார்ஷின் உடல்நிலை குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவருக்கு ‘டெஸ்டிகுலர் பிளீடிங்’ பாதிப்பு இருப்பது ஸ்கேன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீவிரக் காயம் காரணமாக அவரால் சரியாக நகரக் கூட முடியவில்லை என்றும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் நீண்ட ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், அனுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்மித், 6 போட்டிகளில் 299 ரன்களைக் குவித்து அசத்தினார்.

குறிப்பாக 167.97 என்ற அதிரடி ஸ்டிரைக் ரேட் மற்றும் 59.80 என்ற சராசரியுடன் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்களை விளாசினார். இந்தச் சிறப்பான ஆட்டமே அவருக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இன்றைய போட்டியை தவிர ஆஸ்திரேலிய அணியின் மீதமுள்ள போட்டிகளில் ஸ்மித் அணியை தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: