மொழிக்காக போராடுவதை நோய் என்பதா? தமிழ்நாட்டின் பிராந்திய உணர்வை அவமதித்தால் மோதல் வெடிக்கும்: ஆர்எஸ்எஸ் தலைவருக்கு ராஜ்தாக்கரே எச்சரிக்கை

 

மும்பை: ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதன் தலைவர் மோகன்பகவத் பேசுகையில்,’ ஒருவரின் மொழிக்கான போராட்டம் நடத்துவது நோய் போன்றது. எனவே மொழி பிரச்னையில் உள்ளூர் மயமாக்கப்பட்ட நோய் பரவக்கூடாது’ என்று தெரிவித்தார். இதற்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்,’ ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஒருவரின் மொழிக்காக போராட்டம் நடத்துவது ஒரு நோய் என்று கருதினால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் பிராந்திய உணர்வு தீவிரமானது. பஞ்சாப், மேற்கு வங்கம், குஜராத்திலும் இதேபோன்ற உணர்வு உள்ளது. நாட்டின் நான்கு-ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கூட்டமாக வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்று, அங்கு ஆணவத்துடன் நடந்துகொண்டு, உள்ளூர் கலாச்சாரத்தை நிராகரித்து, உள்ளூர் மொழியை அவமதித்து, தங்கள் சொந்த வாக்கு வங்கிகளை உருவாக்கும்போது, ​​அது உள்ளூர் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி, ேமாதலுக்கு வழிவகுக்கும். அப்படி நடக்கும் போது மோகன் பகவத் அதை ஒரு நோய் என்று அழைப்பாரா? மொழி மற்றும் மாநிலத்தின் மீதான அன்பு ஒரு நோய் என்று மோகன் பகவத் உணர்ந்தால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன.

உத்தரபிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குஜராத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது, ேமாகன் ​​பகவத் இந்த பிரசங்கங்களை வழங்கவில்லை. மராத்தி மக்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பதால் மோகன் பகவத் இதுபோன்ற கருத்துக்களைச் சொல்லும் தைரியத்தைக் காட்ட முடியும். எங்களுக்கு, மராத்தி மொழி மற்றும் மராத்தி மக்கள் மிக முக்கியமானவர்கள். மொழியியல் மற்றும் பிராந்திய அடையாளங்கள் இந்த நாட்டில் இருக்கும், அதே போல் மகாராஷ்டிராவிலும் அவை இருக்கும்! இது எங்கள் உரிமை, இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போதெல்லாம், மகாராஷ்டிரா முழு கோபத்துடன் எழும்.

முதலில் தேசிய மொழி கூட இல்லாத இந்தியை நாடு முழுவதும் திணிக்கும் அரசாங்கத்தை ஆர்எஸ்எஸ் கண்டிக்க வேண்டும். பின்னர் நல்லிணக்கம் பற்றி நமக்குக் கற்பிக்க வேண்டும்.2014 ஆம் ஆண்டில், மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இன்று அது இரண்டாவது இடத்தில் உள்ளது, ஆனால் பசுவதை அரசியலின் நாடகம் தொடர்கிறது உணர்வுகளைத் தூண்டுகிறது. மோகன் பகவத் எப்போது இது குறித்துப் பேசுவார்?. இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

Related Stories: