திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக பிரபல நடிகர் ஜெயராமிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சியிலுள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த இரு வழக்குகளிலும் உண்ணிகிருஷ்ணன் போத்தி தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் கருப்புப் பண பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மத்திய அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது. சபரிமலையில் இருந்து தங்கத்தகடுகளை உண்ணிகிருஷ்ணன் போத்தி தான் சென்னைக்கு கொண்டு சென்றார். இவர் தங்கத் தகடுகளை சென்னையில் தன்னுடைய அலுவலகத்தில் வைத்தும், முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் கொண்டு சென்று பூஜை நடத்தி லட்சக்கணக்கில் பணம் வசூலித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உண்ணிகிருஷ்ணன் போத்தி சென்னையிலுள்ள நடிகர் ஜெயராமின் வீட்டுக்கும் தங்கத் தகடுகளை கொண்டு சென்று பூஜை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு ஏற்கனவே விசாரணை நடத்தியது. இந்நிலையில் அமலாக்கத்துறையும் ஜெயராமிடம் விசாரணை நடத்த தீர்மானித்தது. 17ம் தேதி (நேற்று) கொச்சியிலுள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதன்படி நேற்று காலை நடிகர் ஜெயராம் விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் சுமார் மூன்றரை மணிநேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. இதன் பிறகு வெளியே வந்த ஜெயராம் நிருபர்களிடம் கூறியது: அதிகாரிகள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்துள்ளேன். மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்றோ, ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றோ அவர்கள் கூறவில்லை.
கேரளாவிலும், கேரளாவுக்கு வெளியேயும் கோயில்கள் உள்பட பல்வேறு இடங்களில் பூஜைகள் நடைபெறும்போது என்னையும் அழைப்பார்கள். அதேபோலத்தான் உண்ணிகிருஷ்ணன் போத்தியுடன் நான் பூஜையில் கலந்து கொண்டேன். அவருக்கு 100 ரூபாய் தட்சிணை மட்டும் தான் கொடுத்தேன். வேறு பணம் எதுவும் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
