பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ். இவர் இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்த கட்சியில் இருந்தாலும் பாஜவுக்கே இவர் விஸ்வாசமாக இருந்து வந்தார். மோடி கோவைக்கு வந்தபோது எல்லாம், விழுந்து விழுந்து வேலை செய்தார். இதேபோல், இவரது மகனான ஜோஸ் சார்லசும் பாஜவில் பயணித்து வந்தார். லாட்டர் அதிபர் மார்ட்டின், தனது தொழிலை பாதுகாக்க மனைவி மற்றும் மகனை பாஜவுக்கு ஆதரவாக களமிறக்கினார். ஆனால், கோடி கோடியாக பணமிருந்து தேர்தல் அரசியலில் கோலோச்ச முடியாததால், புது ரூட்டை எடுக்க மார்ட்டின் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி, மார்ட்டின் சிஷ்யரான புதுச்சேரி பாஜ அமைச்சர் ஜான்குமார், ஜோஸ் சார்லஸை புதுச்சேரி அரசியலில் களமிறக்க ஐடியா கொடுத்து புது கட்சியை (லட்சிய ஜனநாயக கட்சி) தொடங்க வைத்தார். பாஜவுக்கு எதிராக களமிறங்கிய ஜோஸ் சார்லசை டெல்லி அழைத்து மிரட்டி பாஜ, அவர்கள் பக்கம் சாய வைத்துவிட்டது. தற்போது, மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட திட்டமிட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன் எடப்பாடியை சந்தித்து பேசினார்.
அப்போது, தனது சமூக வாக்குகள் மற்றும் பணத்தை கொட்டி தேர்தல் செலவை நான் பார்த்து கொள்கிறேன் என கூறியதால் எடப்பாடியும் கிரீன் சிக்னல் கொடுத்தார். இந்த சந்திப்புக்கு பின் அவர் அதிமுகவில் இணைந்ததாக செய்திகள் வெளியானது. அப்போது, அதை மறுத்த லீமா ரோஸ் மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதாக விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக லீமா ரோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2012 முதல் 14 ஆண்டு காலமாக இந்திய ஜனநாயக கட்சியில் பெரும் அர்ப்பணிப்போடு பயணித்து வந்திருக்கிறேன். எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கட்சியின் வளர்ச்சிக்காக முழு உழைப்பையும், பங்களிப்பையும் வழங்கி தமிழ்நாடு முழுவதும் பயணித்துள்ளேன். இவ்வாறு நேரம், காலம் பார்க்காமல் நான் உழைத்த கட்சி என் உழைப்பை அங்கீகரிக்கவில்லை என்பதும், சமீப காலமாக எனது உழைப்பை உதாசீனப்படுத்தியதும் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரிய மனமில்லாமல் என்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி 8 மாதம் காத்திருந்தேன். கட்சித் தலைமையில் இருந்து எந்த ஒரு முறையான பதில் வராத காரணத்தினாலும், சில சமீபகால கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலும் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுக்க நான் தள்ளப்பட்டுள்ளேன்.
இந்த முடிவினை கனத்த இதயத்தோடு அறிவிக்கிறேன். இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகினாலும் எனது அரசியல் பயணமும், மக்கள் சேவையும் தொடரும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இந்நிலையில் இரண்டு வாரங்களில் அதிமுகவில் லீமா ரோஸ் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. லீமா ரோஸின் மருமகனான ஆதவ் அர்ஜூனா தவெகவில் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஐஜேகேவில் இருந்து விலகி தவெகவில் இணைய திட்டமிட்ட லீமா ரோஸ், மருமகன் ஆதவ் அர்ஜூனாவின் செயல்பாடுகள் பிடிக்காததால் அக்கட்சியில் இணையவில்லை என கூறப்படுகிறது. இதனால், மருமகன் ஆதவ் அர்ஜூனாவை எதிர்த்து அரசியல் செய்வதற்காக, அதிமுகவில் அவர் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
