20 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட அனுமதி

சேலம், பிப்.3:நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை மத்திய அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. சேலத்தில் அரசு மற்றும் தனியார் மருததுவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் என 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. இதற்காக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 12 மையத்தில் தடுப்பூசி போடப்படும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் என பெரும்பாலானர்கள் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். அதேபோல், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள மருத்துவமனைகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 195 மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சேலம் சுகாதார மாவட்டத்தில் 19 மருத்துவமனைகளும், ஆத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி போட்டு கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களது விண்ணப்பங்களை பரிசீலித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்டத்தில் 20 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்கு அந்த மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட்டு கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 ஆயிரம் பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடப்படும். இந்த பணிகள் ஒரிரு நாட்களுக்குள் முடிவடைந்து விடும்,’’ என்றனர்.

Related Stories: