×

பாஜவின் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் பதவி அதிரடி பறிப்பு: அண்ணாமலைக்கு ஆதரவாக இருந்தவர் என்பதால் கட்சிக்குள் பரபரப்பு

 

சென்னை: பாஜ அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கேசவ விநாயகம் திடீரென மாற்றப்பட்டார். இது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜவில் நிலவும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பாஜ, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், மாநிலத தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், கட்சியில் நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகியது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டத்தின் முடிவில், கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கேசவ விநாயகம் அதிரடியாக மாற்றப்பட்டார்.

இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பதவியில் இருந்து வந்தார். ஆர்.எஸ்.எஸ். முகாமில் இருந்து வருபவர்கள் மட்டுமே இந்த பதவிகளில் இருந்து வருகிறார்கள். அதேபோல தேசிய அளவில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து தேசிய அமைப்பு பொதுச் செயலாளராக இருப்பவர்தான் பி.எல்.சந்தோஷ். தமிழகத்தில் தற்போது கேசவ விநாயகம் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதன் மூலம் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பதவி காலியாகி உள்ளது. அவர் மீண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு திரும்பியுள்ளார். அதே நேரத்தில், அவருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதிய மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நியமிக்கப்படும் வரை பா.ஜ தேர்தல் நடவடிக்கையை ஆர்.எஸ்.எஸ். கூட்டு குழு மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலைக்கு நெருக்கமானவராக கேசவ விநாயகம் இருந்தார்.

அண்ணாமலையிடம் பல வீடியோ, ஆடியோக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதில் கேசவ விநாயகமும் இருப்பதாக கூறப்பட்டது. அது முதல் அவர் அண்ணாமலையின் தீவிர நண்பராக மாறிவிட்டார் என்று கூறப்படுகிறது. கட்சியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்கு கேசவ விநாயகம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. குறிப்பாக அண்ணாமலை மாற்றப்பட்டபோது அவரையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் கேசவ விநாயகத்தை மாற்றாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜவும் அமைதி காத்தது. ஆனால் தற்போது தேர்தல் நேரத்தில் மாநில பாஜவில் கடுமையான குழப்பம் நிலவி வருகிறது.

குறிப்பாக மாநில தலைமைக்கு அண்ணாமலை கட்டுப்படுவதே இல்லை. இதுகுறித்து உரிய நேரத்தில் தலைமைக்கு தெரிவிக்காமல், மோதல் வளர காரணமாக இருந்ததாக அவர் மீது தேசிய தலைமை கோபம் கொண்டது. இதனால்தான் அவர் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் சில பெண் நிர்வாகிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது கட்சிக்குள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் கேசவ விநாயகம் அதிரடியாக மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Tags : BJP ,Kesava Vinayagam ,Annamalai ,Chennai ,Tamil ,Nadu ,RSS ,Sethupat, Chennai ,RSS… ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!!நகை கடன் தள்ளுபடி: 11.70 லட்சம் பேர் பயன்