×

படம் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டதால் ‘ஜனநாயகன்’ வழக்கு இன்று வாபஸ்

 

சென்னை: ஜனநாயகம் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதையடுத்து ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வாபஸ் பெறப்பட உள்ளது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கோரி படத்தை தயாரித்த நிறுவனமான கேவிஎன் புரடெக்சன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.  இதை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு ஜனவரி 20ம் தேதி விசாரித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க 5 பேர் கொண்ட குழு உள்ளது. அந்த குழு படத்தை பார்த்து பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும் என்று வாதிட்டார்.

பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், படத்தை 9ம் தேதி திரையிட முடிவு செய்ததால் அவசர வழக்காக விசாரிக்க தனி நீதிபதி முன் முறையிடப்பட்டது. சான்று வழங்குவது தொடர்பாக படத்தை பார்த்த குழு தகவல் தெரிவித்து விட்டால் இரண்டு நாட்களில் சான்று வழங்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த அன்றே மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததுடன், ராணுவம், மத நல்லிணக்கம் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை குழு தலைவர் அனுப்பியுள்ளார். எனவே, பட தயாரிப்பு நிறுவனம் தங்களது கோரிக்கைகளில் மாற்றம் செய்து தனி நீதிபதியிடம் மனு தாக்கல் செய்து முறையிடலாம் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தது. இந்த நிலையில், பட தயாரிப்பு நிறுவனம் ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பியுள்ளது. இந்த குழு 20 நாட்களில் படத்தை மறு ஆய்வு செய்து தணிக்கை சான்று தரும்.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை பட தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் நேற்று வாபஸ் பெறுவதற்காக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு முதல் வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

Tags : Chennai ,KVN… ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!!நகை கடன் தள்ளுபடி: 11.70 லட்சம் பேர் பயன்