×

தொகுதி பங்கீட்டு பேச்சு தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை: டெல்லி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க திட்டம்

 

சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுடன் ராகுல்காந்தி இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள் அப்படியே இருப்பதால் வலிமையாக உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமக (அன்புமணி), டிடிவி.தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே இணைந்துள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. அதற்கான குழு விரைவில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த குழு அமைத்த உடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கபட்டுள்ளது. இந்த குழு பேச்சுவார்த்தையை தொடங்க திமுக தலைமையிடம் கேட்டு வருகிறது. இந்த தேர்தலில் தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர் தேர்வை வேகப்படுத்த ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருவது குறித்தும் டெல்லி தலைமைக்கு புகாராக சென்றது.

கூட்டணி தொடர்பான விமர்சனங்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரசில் எடுத்த, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து நேரடியாக ஆய்வு நடத்த ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக டெல்லியில் ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு ராகுல்காந்தி ஏற்பாடு செய்துள்ளார். இன்று டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தின் முக்கிய அம்சமாக, தமிழக காங்கிரசில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 74 மாவட்ட தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார். இதை தொடர்ந்து அவர்கள் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். இந்த கூட்டத்தில், கட்சியின் அமைப்பு பலத்தை வலுப்படுத்தி, தேர்தல் உத்திகளை வகுப்பதே இதன் நோக்கமாக இருக்கும்.

ராகுல் காந்தி ஏற்கனவே மாநில அளவிலான தலைவர்களுடன் பேசியுள்ளார். மாவட்டத் தலைவர்களுடனான இந்த சந்திப்பு, கூட்டணி ஒருங்கிணைப்பு, கள அளவில் மக்களைத் திரட்டுதல், மாநில தேர்தல் செயல்திறனை மேம்படுத்துதல் மீது கவனம் செலுத்தும். பூத் நிலை வரை கட்சியைப் பலப்படுத்துவது குறித்தும் அவர் வழிகாட்டுவது சில உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவது குறித்து அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.எனவே, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட தலைவர்களிடம் ராகுல்காந்தி கருத்து கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட தலைவர்களின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் டெல்லி பயணம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Rahul Gandhi ,Congress ,Delhi ,Chennai ,Tamil Nadu ,Congress district ,DMK ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!!நகை கடன் தள்ளுபடி: 11.70 லட்சம் பேர் பயன்