சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பனையூரில் போட்டியிட வேண்டும் என விருப்பமனு அளித்துள்ள நிலையில், தவெகவில் உள்ளவர்கள் சின்னப் பிள்ளைகள் என சீமான் கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுடன் நேற்று கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடலில் வேட்பாளர்கள் தேர்தல் பணிகளில் எவ்வாறு ஈடுபடவேண்டும், எவ்வாறு வாக்கு சேகரிக்க வேண்டும், எவற்றில் கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார் சீமான். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது; 21ம் தேதி நடைபெறும் மாநாட்டில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்து களத்திற்குச் சென்றுவிடுவோம்.
விஜய் கட்சியில் இருக்கும் சின்னப் பிள்ளைகளுக்குத் தெரியவில்லை. இது வியபாரம் இல்லை, விற்பனைப் பண்டம் போல் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். பனையூர் ஒரு தொகுதியில்லை என்பது பிள்ளைகளுக்குத் தெரியவில்லை. போகப் போகக் கற்றுக்கொள்வார்கள். முதலில் காங்கிரஸ் கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாமா எனத் தம்பி விஜய் என்னிடம் கேட்டபோது காங்கிரஸை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு என்ன அரசியல் பேசுவது எனக் கேட்டேன்; அதை அவர் கவனித்தார்.
ஒன்றிய நிதிநிலை அறிக்கையை நான் ஏற்கவில்லை. எப்போதும் நமது நாட்டின் நிதிநிலை அறிக்கை முதலாளிகளின் வாழ்வாதாரத்திற்கும் வளர்சிக்கும் தான் உதவும்; அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கு இருக்காது. அதைப்பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.
