×

பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய அரசு, துணைபோகும் அதிமுகவை கண்டித்து வரும் 12ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்த முடிவு

சென்னை: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜ அரசையும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் வரும் 12ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.3,458 கோடி, நூறு நாள் வேலை திட்ட நிதி ரூ.2,000 கோடி, குடிநீர் இணைப்பு திட்ட நிதி ரூ3,112 கோடி உள்ளிட்ட எந்த நிதியையும் விடுவிக்காமலும் – வளர்ச்சி திட்டத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்காமலும், தமிழ்நாட்டு மக்களை புறக்கணித்துள்ளது ஒன்றிய பாஜ அரசு.

தமிழ்நாட்டிற்கான நிதியும் இல்லை – வளர்ச்சி திட்டமும் இல்லை என ஒன்றிய அரசு கைவிரித்த போதும் அவர்களது காலில் விழுந்து ஆதரித்துள்ளது அடிமை அதிமுக. நிதி மறுப்பு ஒருபுறம் என்றால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை சிதைத்து, நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டத்தை திரும்பப்பெறவோ, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ செய்யாமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது ஒன்றிய பாஜ அரசு.

அதோடு அமெரிக்காவின் விவசாயம் சார்ந்த பொருட்களை இங்கே இறக்குமதி செய்து விற்க ஒப்புக்கொண்டு நமது விவசாயிகளின் வாழ்வையே கேள்விக்குறியாக்கி உள்ளது. இதுமட்டுமின்றி, ஒரே நேரத்தில் 100 நாள் வேலை ஒழிப்பு சட்டம், விவசாயத்தை அழிக்கும் ஒப்பந்தம் என கிராமப்புற மக்கள் மீது இரட்டை அணுகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளது ஒன்றிய பாஜ அரசு. இதற்கு உறுதுணையாக இருந்து துரோகம் செய்து வருகிறது அதிமுக.

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், புது புது சட்டங்கள், ஒப்பந்தங்கள் வழியே மக்களை வஞ்சிப்பது, நம் வளர்ச்சியை தடுத்து வீழ்ச்சியில் தள்ள துடிப்பது என அநீதி இழைத்து வரும் ஒன்றிய பாஜவை எதிர்த்தும், அதோடு கூட்டு சேர்ந்து டப்பா எஞ்சின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் டெல்லியின் அடிமையாக்க துடிக்கும் அடிமை அதிமுகவை கண்டித்தும் தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் கழக ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் வரும் 12ம் தேதி காலை 10.30 மணிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் அனைவரும் கலந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பாஜ அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DMK alliance ,Union government ,Tamil Nadu ,AIADMK ,Chennai ,BJP government ,Union ,Union BJP… ,
× RELATED தமிழக சட்டப்பேரவையில் பிப்.17ல்...