×

திமுக கூட்டணியில் ராமதாசை சேர்க்க மறுப்பு; தவெகவில் 10 சீட் கேட்டு பேச்சு நடத்த திட்டம்: விரைவில் ராமதாசை சந்திக்கிறார் செங்கோட்டையன்

சென்னை: திமுக கூட்டணியில் ராமதாசை சேர்க்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், தவெக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்த ராமதாஸ் முடிவு செய்துள்ளார். இதற்காக செங்கோட்டையன் விரைவில் ராமதாசை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தமிழக அரசியல் களம் 2026 சட்டப் பேரவைத் தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் வேளையில், புதிதாக களத்தில் இறங்கிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைய, இன்னும் எந்த கட்சியும் முன் வரவில்லை.

இந்நிலையில் தேமுதிக, ஓபிஎஸ் தரப்பினர் மற்றும் பாமக (ராமதாஸ்) ஆகியோர் மட்டுமே இன்னும் எந்தக் கட்சியிலும் கூட்டணி சேராமல் உள்ளனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அதிகார மோதல் போக்கு நிலவு வருகிறது. இதன் காரணமாக இருவரும் இரு தரப்பினராக பிரிந்து கட்சியை வழிநடத்தி வருகின்றனர். இந்த சூழலில், தேர்தலுக்காக அன்புமணி தலைமையிலான பாமகவினர், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது.

இந்த சட்டமன்றத் தேர்தலில் அன்புமணிக்கு 10 முதல் 17 சீட்டு வரை அதிமுக ஒதுக்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. கிறது. அன்புமணி இருக்கும் கூட்டணிக்கு செல்ல மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்த ராமதாஸ், திமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தியா கூட்டணியில் ராமதாஸ் இணைய திமுகவிற்கு எந்த ஆட்சேபனை இல்லை என்றாலும், விசிக இருப்பதால் ராமாதஸை இணைக்க திமுக தயக்கம் காட்டி வந்தது.

இதற்கு காரணம், ஏற்கனவே, 2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, விசிகவும் பாமகவும் ஒரே கூட்டணி இணைந்தது கிடையாது என்ற நிலை இருந்து வருகிறது. எனவே, விசிக தலைவர் திருமாவளவன், பாமகவுடனும் பாஜகவுடனும் கூட்டணி கிடையாது என பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருக்கிறார். இதனால் தான் ராமதாஸை கூட்டணியில் இணைக்க திமுக தயங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில், திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், ராமதாஸ் இணைவதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதை தொடர்ந்து, திமுக கூட்டணியில் ராமதாசை சேர்க்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அன்புமணி இருக்கக்கூடிய அதிமுக உடனும் திமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது சூழலில் ராமதாஸ் சிக்கி தவித்து வருகிறார். இந்நிலையில் ராமதாசுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு விஜய் தான். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பாமக நிறுவனர் ராமதாசை தவெக கூட்டணியில் இணைக்க செங்கோட்டையன் முயற்சித்து வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் ராமதாஸை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் ராமதாஸ் தரப்பு தவெக தரப்போடு பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையனும் உறுதி செய்துள்ளார். தவெக கூட்டணியில் ராமதாஸ் 10 சீட் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தேமுதிக மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் இன்னும் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்காத நிலையில், ராமதாஸ் – செங்கோட்டையன் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

Tags : DMK ,Ramadoss ,Teva ,Sengottaiyan ,Chennai ,Tamil Nadu Political Field 2026 ,
× RELATED தமிழக சட்டப்பேரவையில் பிப்.17ல்...