குடியரசு நாள் விழாவில் கலாச்சார நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கேடயம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சென்னை, காமராஜர் சாலையில் கடந்த 26ம் தேதி நடந்த குடியரசு நாள் விழாவில் பள்ளி மாணவிகளின் கலாச்சார நிகழ்ச்சிகளில் சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசும், சென்னை, லேடி சிவகாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டாம் பரிசும், தமிழ்நாடு அரசு மாதிரி பள்ளிகளுக்கு மூன்றாம் பரிசும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதை தொடர்ந்து, கல்லூரி மாணவிகளின் கலாச்சார நிகழ்ச்சிகளில் சென்னை, கொளத்தூர், சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு முதல் பரிசும், சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு இரண்டாம் பரிசும், சென்னை, ராணிமேரி கல்லூரிக்கு மூன்றாம் பரிசும் முதல்வர் வழங்கினார்.

தொடர்ந்து, குடியரசு நாள் விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில், சிறந்த அலங்கார ஊர்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதலிடம் பெற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கான முதல் பரிசிற்கான கேடயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் வழங்கினார்.

அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் இரண்டாம் இடம்பெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கான கேடயத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் சத்யபிரத சாகு பெற்றுக்கொண்டார். அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் மூன்றாமிடம் பெற்ற காவல் துறைக்கான கேடயத்தை உள்துறை செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) வெங்கடராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோரிடம் முதல்வர் வழங்கினார். இந்நிகழ்வின்போது, தலைமை செயலாளர் முருகானந்தம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: