- செஞ்சி
- சிபிஐ
- பா.ம.க.
- வல்லம் ஒன்றிய பா.ம.க.
- ஏழுமலை
- கல்லடிகுப்பம்
- விழுப்புரம் மாவட்டம்
- வல்லம் ஒன்றிய பா.ம.க.…
செஞ்சி: வல்லம் ஒன்றிய பாமக முன்னாள் சேர்மன் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கல்லடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் வல்லம் ஒன்றிய பாமக முன்னாள் ஒன்றிய சேர்மன். ரியல் எஸ்டேட் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். இவருக்கு செஞ்சியில் மட்டுமின்றி சென்னையில் திருமண மண்டபம், அலுவலகம் மற்றும் தியேட்டர் உள்ளது.
மேலும் கல்லடிகுப்பத்தில் விவசாய நிலமும், சொந்த வீடும் உள்ளது. நேற்று காலை 6 மணியளவில் ஒரே நேரத்தில் 60 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து ஏழுமலைக்கு சொந்தமான சென்னை அலுவலகம், நாட்டார்மங்கலம், செஞ்சி, விழுப்புரம் சாலையில் உள்ள அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
காலை 6 மணிக்கு துவங்கிய ரெய்டு மாலை 4 மணி வரை நீடித்த நிலையில், அலுவலக கதவுகளை மூடிக் கொண்டு சிபிஐ அதிகாரிகள் ஏழுமலை மற்றும் அவரது உறவினர்கள், பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றை அடுத்தகட்ட விசாரணைக்கு எடுத்துச் சென்றதாக தெரிகிறது. விசாரணைக்கு தாங்கள் கூப்பிடும்போது சென்னைக்கு வருமாறு ஏழுமலையிடம் சிபிஐ அதிகாரிகள் கூறிவிட்டு சென்றுள்ளனர்.
