×

சங்கரன்கோவிலில் பயங்கரம் முன்னாள் கவுன்சிலர் மகன் சரமாரி வெட்டிக்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் மகன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ராமசாமியாபுரத்தை சேர்ந்த சந்திரன்-ஜெயலட்சுமி தம்பதியர் மகன் ஜோதிமுருகன் (30). ஓட்டல் நடத்தி வந்தார். ஜெயலட்சுமி நகராட்சி முன்னாள் கவுன்சிலர். நேற்று முன்தினம் இரவு ஜோதி முருகன் நண்பர்களுடன் ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ஜோதிமுருகனுக்கு செல்போன் அழைப்பு வரவே நடந்து கொண்டே பேசிக்கொண்டிருந்தார். நண்பர்கள் அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றனர். அந்த நேரத்தில் பைக்கில் வந்த மர்ம கும்பல் திடீரென ஜோதி முருகனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் தலை, கழுத்து முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பியது.

தகவலறிந்து வந்த போலீசார் ஜோதிமுருகன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோதி முருகன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று காலை 11 மணியளவில் கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று ஜோதிமுருகன் உறவினர்கள் பஸ் நிலையம் அருகே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர்களுடன் தென்காசி எஸ்பி மாதவன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் உடனே பிடிபடுவார்கள் என உறுதி கூறியதை தொடர்ந்து மதியம் 2 மணிக்கு அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Sankarankovil ,Jyothimurugan ,Chandran-Jayalakshmi ,Ramasamyapuram, ,Sankarankovil, Tenkasi district ,
× RELATED சட்டப்பேரவை தேர்தலையொட்டி துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி தமிழகம் வருகை