×

இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க கோரி வைகோ வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: கடந்த 2012ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த உத்தரவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்ட தீர்ப்பாயம் உறுதி செய்து உத்தரவிட்டது.  தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மதிமுக பொது செயலாளர் வைகோ கடந்த 2013ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுதிர் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ நேரில் ஆஜராகி வாதிட எழுந்தார். அப்போது, ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வைகோ, இலங்கையில் தனி ஈழம் மலர்வதற்கான போர் இன்னும் முடியவில்லை. இதுவரை விடுதலை புலிகள் நடத்திய 4 போர்கள் முடிவடைந்தாலும், வரும் தலைமுறையினர் இலங்கையில் தனி ஈழம் மலர்வதற்கான பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கான 5ம் கட்ட போரை புதிய பரிமாணத்தில் மேற்கொள்வார்கள். இன்றைய வளரும் தலைமுறையினருடன் இணைந்து ஈழம் மலர்வதற்கான நடவடிக்கைகளில் நானும் செயலாற்றுவேன் என்று கூறினார்.

Tags : Vaiko ,LTTE ,India ,Chennai ,Tribunal ,MDMK ,general secretary ,
× RELATED சட்டப்பேரவை தேர்தலையொட்டி துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி தமிழகம் வருகை