1 கேள்வி: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அருகில் வைத்துக் கொண்டே அதிமுக ஊழல் சக்தி என விஜய் சொல்வதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: யார் யாரை விமர்சிக்கறதுன்னே விவஸ்தை இல்லை. திரைப்படங்களில் நடிப்பதற்கு விஜய் பணம் வாங்குகிறார். அவர் வாங்குவது வெள்ளையா, கருப்பா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கருப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு? வருமான வரி எவ்வளவு செலுத்தி இருக்கிறார். உயர் நீதிமன்றத்தில் கூட அது தொடர்பாக வழக்கு இருக்கிறது. கருப்பு, வெள்ளை என்றெல்லாம் வாங்குவது சமூகத்துக்குக் கேடு இல்லையா? உண்மையிலேயே கை சுத்தம், ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்றால், நான் இவ்வளவுதான் வாங்கினேன்.
வரி கட்டியிருக்கிறேன் என்று சொல்ல முடியுமா? விஜய்யால் சொல்ல முடியாது. கருப்பு அதிகம், வெள்ளை குறைவு. இது வரி ஏய்ப்பு இல்லையா? மேலும் அந்த கட்சியே லாட்டரி பணம், பிளாக் டிக்கெட் பணத்தில் தான் செயல்படுகிறது. ரூ.100க்கான டிக்கெட் ஆயிரம் ரூபாயும், லாட்டரி விற்கும் பணத்தில் தான் ஓடுகிறது. இவ்வாறு தனது முதுகில் வரி ஏய்ப்பை வைத்துக் கொண்டு சமூகத்திற்கு மிக கேடு பண்ணிக்கிட்டு இருக்கிறார். இதை செய்துவிட்டு, தான் ஒரு உத்தமர் போல பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அதேபோன்று ஜெயலலிதாவையும், அதிமுகவையும் ரோல் மாடலாக வைத்துக் கொண்டு வேறு கட்சியில் கூட்டம் சேர்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2 கேள்வி: அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ அதிக தொகுதிகளை கேட்டு அழுத்தம் கொடுப்பதாக தகவல் உலா வருகிறதே?
பதில்: தொகுதி பங்கீட்டை கட்சி தலைமை தான் முடிவு செய்யும். அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தான் பிற கட்சிகளுடன் பேசி யார் யாருக்கு எவ்வளவு சீட்டு ஒதுக்க வேண்டும் என்பதை அதிமுக தான் முடிவு செய்யும். ஆணித்தரமாக சொல்கிறேன் அதிமுக தான் முடிவு செய்யும்.
3 கேள்வி: என்டிஏ கூட்டணியை பொறுத்தவரை பாஜ தான் அதிமுகவுக்கே தொகுதிகளை பிரித்து கொடுக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளதே?
பதில்: பாஜவை பொறுத்தவரை ஒரு கூட்டணி கட்சி அவ்வளவு தான். தொகுதி பிரித்து கொடுப்பதில் எல்லாம் அவர்களுக்கு இங்கு என்ன ரோல் இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. அதிமுக தான் மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுக்கும். உனக்கு இவ்வளவு, உனக்கு இவ்வளவு என்பதை அதிமுக தான் பிரித்து கொடுக்கும். எனவே, பாஜ தொகுதிகளை பிரித்து கொடுக்கும் என்ற கூற்று உண்மையில்லாத கூற்று.
4 கேள்வி: இந்த தேர்தலில் நீங்கள் தொகுதி மாறி நிற்க உள்ளதாக பேசப்படுவது குறித்து? எந்த தொகுதியில் நிற்க விரும்புகிறீர்கள்?
பதில்: அதில் எந்தவித டவுட்டும் கிடையாது. சந்தேகமே வேண்டாம். கட்சி தலைமையிடம் ராயபுரம் தொகுதியில் சீட் கேட்டுள்ளேன். அந்த தொகுதியில் தான் நிற்க போகிறேன். கட்சியும் ராயபுரம் தொகுதியில் எனக்கு சீட் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் கட்சி எனக்கு சீட் தரும்பட்சத்தில் ராயபுரத்தில் தான் நிற்பேன். அந்த பகுதியில் உள்ளவர்களுடன் நல்லது, கெட்டது என அனைத்திலும் கலந்திருக்கிறேன்.
அவர்களால் ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்த பின்னர் ஒரு சின்ன சறுக்கலுக்காக விலகி விட முடியுமா? 35 ஆண்டுகளாக ஒரே தொகுதியில் நின்றுள்ளேன். அதாவது, இது எனக்கு 8வது தேர்தல். அதிமுக எனக்கு இந்த வரலாற்றை ஏற்படுத்தி கொடுத்ததை நான் பெருமையாக கருதுகிறேன். எதிர்காலத்திலும் கூட கட்சி கட்டளையிடும்பட்சத்தில் ராயபுரத்தில் தான் நிற்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
