×

அடம்பிடிக்கும் 80 வயது எம்எல்ஏ

நாகர்கோவில் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவாக இருக்கும் எம்.ஆர்.காந்தி, மீண்டும் அந்தத் தொகுதியிலேயே போட்டியிட விரும்புகிறார். அவர் தொகுதியில் செல்வாக்குள்ள மூத்த தலைவர் என்பதால், தனக்கே மீண்டும் வாய்ப்பு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது, எம்.ஆர்.காந்தி அவருக்கு எதிராகச் சில கருத்துக்களைத் தெரிவித்தது சர்ச்சையானது. குறிப்பாக, கட்சி நிர்வாகிகளின் நியமனத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது.

இருவருக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவி வந்தது. பாஜ தலைமை 2026 தேர்தலில் பல தொகுதிகளில் இளைஞர்களுக்கும் புது முகங்களுக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பேச்சு நிலவுகிறது. இதனால், 80 வயதைக் கடந்த எம்.ஆர்.காந்திக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா அல்லது அவர் வழிகாட்டி நிலைக்கு மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதை எம்.ஆர்.காந்தி விரும்பவில்லை. கன்னியாகுமரி மாவட்ட அரசியலில் தனக்கிருக்கும் பிடியைத் தக்கவைக்க அவர் முனைப்பு காட்டி வருகிறார்.

நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, 1980ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 முறை தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலும், தனது 7வது முயற்சியில், 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது அவருக்கு வயது 75. தனது 75வது வயதில் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகித் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தார். 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அவருக்கு 80 வயதைக் கடந்துள்ளதால், மீண்டும் அதே நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது பாஜவின் உள்கட்சி விவாதமாக இருந்து வருகிறது.

Tags : MLA ,M.R. Gandhi ,Nagercoil ,
× RELATED சட்டப்பேரவை தேர்தலையொட்டி துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி தமிழகம் வருகை