பாஜவின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பொறுப்பேற்ற நாளில் இருந்தே கட்சிக்குள் கோஷ்டி பூசல் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. பாஜ மாநில தலைவராக அண்ணாமலை இருந்த நாளில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள். புதிய தலைமையை ஏற்காமல் அடிக்கடி அண்ணாமலைக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். நெல்லையில் நடந்த பூத் கமிட்டி மாநாட்டில் கூட ஒன்றிய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், அண்ணாமலை பேச்சை தொடங்கியவுடன் பலத்த கரகோஷம் எழுப்பி, அண்ணாமலைக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
கூட்டணி உள்ளிட்ட விஷயங்களில் தன்னை யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை என அண்ணாமலையும் அடிக்கடி தனது அதிருப்தியை தெரிவித்து வருகிறார். மேலும் பாஜவின் வாக்கு வங்கி உயர காரணமாக இருந்த அண்ணாமலைக்கு கட்சியில் போதிய முக்கியத்துவம் இல்லை என அண்ணாமலை ஆதரவாளர்களும் அடிக்கடி ஆவேச குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்கான பொறுப்புகள் ஒதுக்கீட்டிலும் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டிய அவரை, சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளராக நியமிக் கப்பட்டது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தனது தந்தையின் உடல்நலனை சுட்டிக்காட்டி தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலையும் அறிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தை தலைமையிடமாக வைத்து முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பெயரில் அண்ணாமலை நற்பணி மன்றம் (அரசு பதிவு எண் 15/2025) என பதிவு செய்து தொடங்கினர். இதற்காக பாளை. கேடிசி நகரில் ஒரு விழாவையும் நடத்தினர். மன்றத்தின் கொடியையும் அண்ணாமலையின் படத்தை போட்டு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் கட்சியில் எழுந்த சர்ச்சை காரணமாக கடந்த அக்டோபர் மாதம் அதை கலைக்க அண்ணாமலை உத்தரவிட்டார்.
இந்நிலையில் கட்சியில் இருந்து அண்ணாமலை ஓரம் கட்டப்படும் சூழலில், மீண்டும் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒன்று கூடி ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி பாளை. கேடிசி நகர் பாலம் பகுதியில் அண்ணாமலை நற்பணி மன்றம் பெயரில் ஒரு விளம்பர போர்டு வைத்துள்ளனர்.
அதில், அண்ணாமலை நற்பணிமன்றத்தின் தலைமை அலுவலகமான நெல்லையில் வரும் 8ம் தேதி நிர்வாகிகள் அனைவரும் கூடி விவாதிக்க இருப்பதாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் அண்ணாமலையின் எதிர்கால திட்டங்கள் குறித்து நற்பணி மன்றத்தினர் விவாதிக்க உள்ளதாக தெரிகிறது. இதை முன்கூட்டியே மோப்பம் பிடித்துக் கொண்ட நயினார் தரப்பும் எதற்காக இந்த கூட்டம் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
