- ரிஷிவந்தியம்…
- பாஜக
- பா.ம.க.
- அஇஅதிமுக
- அதிமுக மாவட்டம்
- குமார குரு
- கள்ளக்குறிச்சி
- திமுக
- ரிஷிவந்தியம்
- 2026 பொதுத் தேர்தல்…
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு, திமுகவிடம் தோல்வியை சந்தித்தார். அதேபோல் கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் ரிஷிவந்தியம் சட்டப்பேரவை தொகுதியில் ஒட்டுமொத்தமாக திமுக வேட்பாளர்களே வெற்றி வாகை சூடினர். இதனால் 2026 பொதுத்தேர்தலில் இந்த தொகுதி மக்களின் கண்ணோட்டம் குறித்து இலை தரப்பு ரகசிய சர்வே எடுத்ததாக தகவல் வெளியாகின.
அதில் ஆளும் தரப்புக்கு சாதகமாகவே பெரும்பாலானோரின் கருத்துகள் இருக்க, ரிஷிவந்தியத்தை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கும் முடிவுக்கு அதிமுக வந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் அதிமுக முன்னணி, மூத்த நிர்வாகிகள் இத்தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிக்காமல் நழுவினர். அதேபோல் கூட்டணி கட்சியிலும் இத்தொகுதிக்கு போட்டா போட்டி ஏதுமில்லாத நிலையில் இலைதரப்பு குழப்பத்தில் உள்ளதாம்.
ரிஷிவந்தியமா… ரிஸ்க் வேணாம்… என பாஜகவும், பாமகவும் ஓட்டம் பிடிப்பதால் இலைதரப்பே களமிறங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம். இருப்பினும் எப்படியாவது கூட்டணிக்கு புதிதாக வரும் ஏதேனும் சிறிய கட்சிக்கு ரிஷிவந்தியத்தை தள்ளிவிடும் முடிவில்தான் தற்போதுவரை இலை தரப்பு உள்ளதாக தேஜ கூட்டணி வட்டாரத்தில் பரவலாக பேச்சுகள் அடிபடுகிறது.
இதுகுறித்து ரிஷிவந்தியம் தொகுதி அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது, ரிஷிவந்தியத்தில் இருமுறையும் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 2026 தேர்தலில் போட்டியிட சிட்டிங் எம்எல்ஏவான வசந்தம் கார்த்திகேயன் கடந்தாண்டு முதலே தீவிரமாக களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். 100 சதவீதம் கிராமங்களையே சார்ந்த இத்தொகுதியில் வெற்றிபெற வேண்டுமெனில் பெண்களின் ஏகோபித்த ஆதரவு மிக முக்கியமானது.
தற்போதைய சூழலில் திமுகவுக்கே பிரகாசமான வாய்ப்பு இருப்பதை அறிந்து கொண்ட இலைதரப்பு களமிறங்க தயக்கம் காட்டி பின்வாங்குகிறது. அத்தோடு தமிழகத்தில் ரிஷிவந்தியம் தொகுதியில்தான் திமுக எளிதாக வெற்றிபெறும் என்ற மனநிலை பெரும்பாலான உள்ளூர்வாசிகளிடமும் இருப்பதால் அதிமுக மட்டுமின்றி கூட்டணி கட்சியான பாமக மற்றும் நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள்கூட திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். இது அதிமுக தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் பாமக அன்புமணி தரப்புக்கு ரிஷிவந்தியத்தை ஒதுக்க இலை தரப்பு எடுத்த முன்னெடுப்புக்கு அக்கட்சி பிடிகொடுக்காமல் நழுவியே வருகிறது. இதனால் பாஜகவுக்கு ஒதுக்கும் எண்ணத்தில் அதிமுக இருந்தாலும் அதிமுகவே பின்வாங்குவதால் தனக்கு செல்வாக்கு இல்லாத இத்தொகுதியில் பாஜகவும் போட்டியிட வாய்ப்பில்லை என்றே தற்போதைய களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் பக்கத்து தொகுதியான சங்கராபுரத்தில் பாமகவும், திருக்கோவிலூரில் பாஜகவும் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறது. மூத்தவர்கள் பின்வாங்கினால் இளைஞருக்கு வாய்ப்பு எனும் பெயரில் புதுமுகத்தை பலிகடா ஆக்கும் முடிவில் அதிமுக இருந்து வருவதாக தகவல்கள் கசிகிறது.
