இஸ்லாமாபாத்: 10வது ஐசிசி ஆடவர் டி.20 உலக கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நாளை மறுநாள் முதல் மார்ச் 8ம்தேதி வரை நடக்கிறது. 20 அணிகள்பங்கேற்கும் இந்த தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் வரும் 15ம் தேதி மோத உள்ளன. ஆனால் இந்த போட்டியை புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அவ்வாறு புறக்கணித்தால் நிதி பகிர்வு நிறுத்தப்படுவதுடன், வெளிநாட்டு வீரர்கள் பிஎஸ்எல்லில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், “டி20 உலகக் கோப்பை தொடர்பாக நாங்கள் ஒரு மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.
இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடமாட்டோம். ஏனெனில் விளையாட்டுத் துறையில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது. நாங்கள் மிகவும் கவனமாக நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். வங்கதேசத்துடன் முழுமையாக இணைந்து நிற்க வேண்டும் என கவனமாக முடிவு செய்துள்ளோம், இது மிக பொருத்தமான முடிவுதான்” என ஷெபாஸ் ஷெரீஃப் அமைச்சரவையில் உரையாற்றிய போது தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதால், ஐசிசியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
