- ஜாக்ரெப் தொடர் மல்யுத்தம்
- கோல்டன்
- சுஜீத்
- ஜாக்ரெப்
- சுஜீத் கல்கல்
- ஜாக்ரெப் தரவரிசை தொடர் மல்யுத்தப் போட்டி
- குரோசியா
- ஜக்ரெப், குரோஷியா
ஜாக்ரெப்: குரோஷியாவில் நடந்து வரும் ஜாக்ரெப் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தப் போட்டிகளின் முதல் நாளில் இந்திய வீரர் சுஜீத் கல்கால் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் ஜாக்ரெப் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தப் போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் நாளான நேற்று இந்திய அணிக்கு சிறப்பான நாளாக அமைந்தது. 23 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சுஜித் கல்கால், 65 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் ஈரான் வீரர் பேமான் அலி நெமாட்டியை எதிர்கொண்டார்.
அட்டகாசமாக செயல்பட்ட சுஜித், 3-0 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக நடந்த அரையிறுதிப் போட்டியில் பான் அமெரிக்கன் சாம்பியன் ஜோசப் மெக்கனாவை, 11-0 என்ற புள்ளிக் கணக்கில் சுஜித் வீழ்த்தினார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் அமான் ஷெராவத், 61 கிலோ எடைப் பரிவில் நடந்த போட்டியில் பங்கேற்றார்.
ஜார்ஜியாவின் கியோர்கி கோனியாஷ்விலியை 10-0 என்ற புள்ளிக் கணக்கிலும், ஈரானின் ரெஸா மொமெனிஜோஜதேவை 12-2 என்ற புள்ளிக் கணக்கிலும் அமான் வென்றார். இருப்பினும், 3வது சுற்றில் அமெரிக்க வீரர் ஆஸ்டின் டெசான்டோவிடம் 0-8 என்ற புள்ளிக் கணக்கில் அமான் தோல்வியை தழுவினார். இப்போட்டியில் 2ம் இடம் பிடித்த அமானுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 70 கிலோ எடைப் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீரர் அபிமன்யு மண்ட்வால், காலிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் டைலர் கசக்கை 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.
இருப்பினும் அரையிறுதியில் ஈரான் வீரர் சினா காலிலியிடம் 0-10 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவிய அபிமன்யு, அடுத்த போட்டியல் அமெரிக்காவின் இயான் பார்க்கரை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றார். 86 கிலோ எடைப் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீரர் முகுல் தஹியா, ஈரான் வீரர் அலி சவட்கோஹியிடம் தோற்று, வெண்கலப் பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டார்.
