×

தமிழ்நாடு, கேரளாவில் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு: 9 மாதத்தில் 57.9 கோடி பேர் பயணம்

 

சேலம்: தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழ்நாடு, கேரளாவில் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 6.2 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 9 மாதத்தில் மட்டும் 57.9 கோடி பேர் பயணித்துள்ளனர். நாட்டின் பிரதான போக்குவரத்தாக விளங்கி வரும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல், முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களின் எண்ணிக்கையையும் ரயில்வே வாரியம் அதிகரிக்கிறது. அதிலும், பண்டிகை காலங்களில் மிக அதிகப்படியான சிறப்பு ரயில்களை இயக்கி மக்களை பயணிக்க வைக்கின்றனர். இதன்காரணமாக நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை சுமார் 10 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் இருக்கும் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களிலும் ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளது. அதிலும், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ஓணம், சபரிமலை சீசன் போன்ற பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். நடப்பு நிதியாண்டில் (2025-26), கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையிலான 9 மாத காலத்தில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழ்நாடு, கேரளாவில் இயங்கும் ரயில்களில் 57.9 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதுவே கடந்த நிதியாண்டில் (2024-25), இதேக்காலக்கட்டத்தில் (9 மாதம்) 54.5 கோடி பயணிகள் பயணித்திருந்தனர்.

அதனுடன் ஒப்பிடும்போது, 6.2 சதவீத பேர் அதிகளவு பயணித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து சேலம், கோவை வழியே கேரளா செல்லும் ரயில்களிலும், சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு செல்லும் ரயில்களிலும் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகளவு இருந்து வருகிறது. இந்த வழித்தடங்களில் இன்னும் கூடுதலாக 50 ரயில்களை இயக்கினாலும், பயணிகள் கூட்டம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ்நாடு, கேரளாவில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கடும் இட நெருக்கடி இருந்து வருகிறது. இதனால், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், உ.பி., மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அதிகப்படியான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

Tags : Tamil Nadu, Kerala ,Salem ,Tamil Nadu ,Kerala ,Southern Railway ,
× RELATED அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை