புதுடெல்லி: ‘இலங்கை கடற்படையால் சித்ரவதை அனுபவித்து வரும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தரமான உறுதியான தீர்வு தேவை’ என மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார். மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் திமுக எம்பி திருச்சி சிவா பேசியதாவது: தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போதெல்லாம், கவனக்குறைவாக கண்ணுக்கு தெரியாத சர்வதேச கடல் எல்லையை தாண்டுகின்றனர்.
இதனால் இலங்கை கடற்படையினரால் மனிதாபிமானமற்ற முறையில் பிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகள் தற்போது இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு கடும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக மாநில அரசு ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுகிறது.
ஒன்றிய அரசு தலையிட்டாலும், இதற்கு ஒரு நிரந்தரமான, உறுதியான தீர்வு தேவை. தமிழக மீனவர்களுக்கு எதிரான அட்டூழியங்களை நிறுத்தும்படி இந்திய அரசு, இலங்கை அரசிடம் உறுதியான குரலில் வலியுறுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்பது குறித்தும் ஒன்றிய அரசு ஆராய வேண்டும். இதுவும் ஒன்றிய அரசு தீர்க்க வேண்டிய மற்றொரு பிரச்னை. இவ்வாறு அவர் கூறினார்.
