கருங்கல்: கருங்கல், பள்ளியாடி அருகே கஞ்சா கும்பல் ஆட்டோ டிரைவர், பால் நிறுவன ஊழியர் உள்பட 5 பேரை சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தியும் நடத்திய வெறியாட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி கும்பலில் உள்ள நபர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. குமரி மாவட்டத்தில் மது, கஞ்சா போதையில் பைக்குகளில் அதிக வேகமாக செல்லுதல், அலறும் சைலன்சர்கள் மற்றும் ஹாரன்கள் பொருத்தி பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பயணித்தல் அதிகரித்து வருகிறது. கடந்த புத்தாண்டு தினத்தில் கூட, கருங்கல் பகுதியில் அலறும் சைலன்சர்களுடன் பைக் ரேஸில் ஈடுபட்ட கும்பலை பொதுமக்கள் தாக்கிய சம்பவமும் அரங்கேறியது.
போலீசாரின் எச்சரிக்கையை மீறி, இந்த கும்பல்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கருங்கல் அருகே முள்ளங்கினாவிளை பகுதியை சேர்ந்த ஆட்லின் பிரிஜோ (26) என்பவரின் வீட்டு முன், நேற்று முன்தினம் இரவு பைக்குகளில் வந்த 2 பேர், பைக்கில் அலறும் சைலன்சர்கள் பொருத்தி ரேஸ் செய்தனர். இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த ஆட்லின் பிரிஜோ, அவர்களை கண்டித்துள்ளார். அப்போது அந்த கும்பல் அவருடன் தகராறு செய்தது. அந்த கும்பலில் இருந்த முள்ளங்கினாவிளை வடலிவிளை பகுதியை சேர்ந்த அஸ்லின் (27) என்பவர், ஆட்லின் பிரிஜோவை தாக்குமாறு கூறினார். இதனால் அந்த கும்பல் ஆட்லின் பிரிஜோவை தாக்க ஓடினர். உயிருக்கு பயந்து, அவர் வீட்டிற்குள் ஓடினார்.
கும்பல் வீட்டிற்குள் புகுந்து ஆட்லின் பிரிஜோவை சரமாரியாக கத்தியால் குத்தினர். ஆட்லின் பிரிஜோவின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியினர் திரண்டனர். அப்போது அஸ்லின் மற்றும் அவருடன் வந்த கும்பல், பொதுமக்களை அரிவாள், கத்தியை காட்டி மிரட்டி விட்டு, தப்பி சென்றனர். கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த ஆட்லின் பிரிஜோ, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கத்தியின் முனை பகுதி உடைந்து, இடது பக்க தோள் பகுதியில் உள்ளே இருந்தது. ஆபரேஷன் மூலம் அது அகற்றப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி அஸ்லின் மற்றும் கண்டால் தெரியும் 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். படுகாயம் அடைந்த ஆட்லின் பிரிஜோ, முளகுமூடு பகுதியில் ஒரு பால் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் ேவலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் அஸ்லினுக்கும் முன் விரோதம் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த முன் விரோத தகராறு தொடர்பாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவும் செய்யபட்டு இருக்கிறது. இந்த நிலையில் பள்ளியாடி அருகே உள்ள சிறிய பண்டாரவிளை பகுதியில் ஒரு கும்பல் அலறும் சைலன்சர்களுடன் பைக்குகளில் ரேஸில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பள்ளியாடி புலிக்குட்டிவிளையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திகேயன் (24) மற்றும் அவரது நண்பர்கள் ஆட்டோவில் வந்தனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக ரேஸில் ஈடுபட்டு இருந்தவர்களை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் கார்த்திகேயன் மற்றும் அவருடன் வந்தவர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
கத்தியாலும் குத்தினர். இதில் கார்த்திகேயன் மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் பள்ளியாடி பகுதியை சேர்ந்த அஜின் (33), தொலையாவட்டம் செம்முதல் பகுதியை சேர்ந்த மற்றொரு அஜின் (32), பள்ளியாடி சேனாதோட்டம் பகுதியை சேர்ந்த ஜாபர் ஜியோ (23), ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். இவர்கள் நால்வரும், கருங்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கார்த்தியேன், மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளியாடி முருங்கவிளை பகுதியை சேர்ந்த செர்ஜின் (20), செர்வின் (22) மற்றும் கண்டால் அடையாளம் தெரியும் 3 பேர் என்று 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் நடத்திய விசாரணையில் இந்த கும்பலில் உள்ளவர்கள் தான் கருங்கல் முள்ளங்கினாவிளை பகுதியில் ஆட்லின் பிரிஜோவை தாக்கியவர்கள் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அஸ்லின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் விசாரித்தனர். இதற்கிடையே அஸ்லின், இன்ஸ்டாகிராமில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதிவுகள் வௌியிட்டு இருக்கும் தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்த கும்பலில் உள்ளவர்கள் கஞ்சா பழக்கத்துக்கும் அடிமையானவர்கள் கூறப்படுகிறது.
கருங்கல், மார்த்தாண்டம் சம்பவங்களில் ஒரே கும்பல் என கூறப்படும் நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே கஞ்சா கும்பலை உடனடியாக கைது செய்யும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிறை ராஜ மரியாதையுடன் வரவேற்கும்
இந்த கொலை வெறி கும்பலில் உள்ளவர்களின் இன்ஸ்டா பதிவுகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளன. இதில் அரிவாள், கத்தியுடன் கூடிய படங்கள் இருப்பதுடன், முள்ளை முள்ளால் தான் எடுக்கணும். உன் பாதுகாப்புக்கு கஞ்சா அடித்து விட்டு கத்தியோடு பயணம் செய்.. வெட்டு வாங்கி சாகறதுக்கு வெட்டி கொன்று விடு. ஜெயில் உன்னை ராஜ மரியாதையுடன் வரவேற்கும்.. இவ்வாறு பதிவுகள் உள்ளன. இந்த பதிவுகள் பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை உண்டாக்கி உள்ளது.
