×

நெல்லையில் கல்லூரி மாணவி ஆணவக்கொலை? காதலன் பரபரப்பு புகார்

நெல்லை: நெல்லையில் கல்லூரி மாணவி சிவமதியை தாய் மாமன் ஆணவக்கொலை செய்துவிட்டதாக நெல்லை போலீஸ் கமிஷனரிடம் காதலன் பரபரப்பு புகார் அளித்தார். நெல்லை பேட்டை செக்கடியை சேர்ந்தவர் பச்சிராஜன். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி ரேவதி, தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது இளையமகள் சிவமதி (18), பாளையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சிவமதியும், பேட்டை கடசர் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஆனந்த கிருஷ்ணனும் காதலித்து வந்தனர். ஆனந்த கிருஷ்ணன் ஏர்டெல் நிறுவனத்தில் டீம் லீடராக வேலை பார்த்து வருகிறார்.

இருவரும் வெவ்வெறு பிரிவினர் என்பதால் சிவமதியின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, உறவினர் மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனிடையே ஆனந்தகிருஷ்ணனும் சிவமதியும் வருகிற 6ம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் சிவமதிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி டவுன் கண்டியபேரி அரசு மருத்துவமனையில் கழுத்தில் காயத்துடன் சிவமதியை பெற்றோர் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பேட்டை போலீசார் மர்மச்சாவு என வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று சிவமதியின் காதலன் ஆனந்தகிருஷ்ணன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உறவினர்களுடன் சென்று சிவமதி ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். இதுகுறித்து ஆனந்தகிருஷ்ணன் அளித்த பேட்டி: நானும், சிவமதியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நான் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவன். சிவமதி வேறு சமுதாயத்தை சேர்ந்தவர். வருகிற 6ம்தேதி நாங்கள் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்துவிட்டு ரிஜிஸ்டர் ஆபீசில் பதிவு செய்ய திட்டமிட்டு இருந்தோம்.

இதுதெரிந்து சிவமதியின் பெற்றோர் அவரது செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டனர். அவருடைய தாய்மாமன் பழனி மற்றும் குடும்பத்தினர் எனது ஜாதியை சொல்லி அவரை திட்டி, மிரட்டியுள்ளனர். இதுபற்றி அன்று காலை 11.15 மணிக்கு சிவமதி என்னிடம் அவரது பாட்டி செல்போனில் இருந்து பேசினார். மேலும் பிரச்னை என்றால் ‘மிஸ்டு கால்’ கொடுப்பதாகவும், தன்னை வந்து கூட்டிச்செல்லும்படியும் கூறினார். அதன் பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. மாலை 3.30 மணிக்கு வீட்டின் மாடியில் நின்று சிவமதி அழுதார். நான் சாலையில் நின்றபடி சைகையில் சமாதானம் செய்தேன். மாலை 6 மணிக்கு அவர் இறந்து விட்டதாக செய்தி வந்தது.

அவர் தற்கொலை செய்யவில்லை. திட்டமிட்ட ஆணவக்கொலை தான். அவரது தாய்மாமன் தான் இதற்கு முக்கிய காரணம். சிவமதியின் ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தும் என்னிடம் தான் உள்ளது. என் காதலியின் மரணத்திற்கு நீதி வேண்டும்.’’ இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே சிவமதியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டு, மாலை 3.30 மணிக்கு அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு சிந்துபூந்துறை மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளி வந்த பிறகே சிவமதி எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது. இந்த வழக்கை உதவி கமிஷனர் இளவரசன் விசாரிக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

* மாதங்களில் 2வது ஆணவப் படுகொலை
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ் (27). சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர் நெல்லையைச் சேர்ந்த போலீஸ் தம்பதி சரவணன் – கிருஷ்ணகுமாரி மகள் டாக்டர் சுபாஷினியை காதலித்தார். ஆனால் பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி நெல்லை கேடிசி நகரில் பட்டப்பகலில் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை எஸ்ஐ சரவணன், தாய் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். மற்ற 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட அடுத்த 6 மாதங்களில், 18வயது இளம் பெண் சிவமதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

Tags : Paddy ,Nella ,Sivamathi ,Bachirajan ,Nellu Patti Seckady ,Revathi ,
× RELATED பழநி அருகே அதிகாலையில் மளிகை கடை கதவை உடைத்து 60 ஆயிரம் ரூபாய் திருட்டு