கள்ளக்குறிச்சி: நாடாளுமன்ற தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தன்னிடம் ரூ.1.60 கோடி வாங்கி மோசடி செய்துவிட்டதாக கூறி அதிமுக முன்னாள் நிர்வாகி கொடுத்த புகார் முடித்து வைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னிடம் ரூ.1.60 கோடி பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணன் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அப்போதைய கள்ளக்குறிச்சி எஸ்.பி ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை உட்கோட்டை டிஎஸ்பி பிரதீப் இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து 17 நாட்களில் வழக்கு விசாரணையை முடித்து வைத்தார். இதனை எதிர்த்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகியும் வழக்கறிஞருமான கிருஷ்ணன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வந்தது. அதில் புகார்தாரரான கிருஷ்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 42 ஆவணங்கள் மற்றும் சாட்சிகளிடம் நீதிபதி இருசன் பூங்குழலி விசாரணை மேற்கொண்டதில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்கிற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இருசன் பூங்குழலி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மற்றும் அவரது குடும்பத்தினரால் தனக்கும் தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் தங்கள் குடும்பத்திலும் தனக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுருதான் காரணம் என்றும் புகார்தாரர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
