×

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலம்

 

பொள்ளாச்சி: ‘‘அம்மா தாயே, மாசாணி தாயே’’ என பக்தி கோஷம் முழங்க ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குண்டமிறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான மயான பூஜை 31ம் தேதி நள்ளிரவு நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை சக்தி கும்பஸ்தாபனம் நடந்தது. இதை தொடர்ந்து குண்டம் இறங்கும் பக்தர்கள் கோயிலில் காப்புக்கட்டி கொண்டனர்.

நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் சேத்துமடை ரோட்டில் உள்ள, மாசணியம்மன் திருமண மண்டப வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட 40 அடி நீளம், 12 அடி அகல குண்டத்தில் சுமார் 35 டன் விறகால் பூ (அக்னி) வளர்க்கப்பட்டது. அப்போது கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை காப்புக்கட்டிய பக்தர்கள் உப்பாற்றில் நீராடினர். 7 மணியளவில் மாசாணியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. கோயிலில் இருந்து பேழைப் பெட்டியை தலைமை முறைதாரர் மனோகரன் தலையில் சுமந்து கொண்டுவர, அருளாளி உள்ளிட்டோர், மாலை அணிந்த பக்தர்களுடன் நடை பயணமாக குண்டம் நோக்கி வந்தனர்.

சுமார் 8 மணியளவில் குண்டத்தில், அருளாளி அருண்குப்புசாமி பேழைப்பெட்டியில் இருந்த பூப்பந்தை உருட்டி விட்டு முதலில் குண்டம் இறங்கினார். அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘‘அம்மா தாயே, மாசாணி தாயே’’ என்ற பக்தி கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் குண்டம் இறங்கக் கூடாது என்பது ஐதீகம். இதனால் ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்ததும் பெண்கள் குண்டத்தில் மலர் தூவியும், வணங்கியும் சென்றனர்.

குண்டம் திருவிழாவை காண கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவை உக்கடம், பொள்ளாச்சி மற்றும் உடுமலை, மதுரை உள்ளிட்ட பகுதியிலிருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நாளை (5ம் தேதி) காலை 9 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை, 6ம் தேதி பகல் 12 மணியளவில் மாசாணியம்மனுக்கு மகா அபிஷேக அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags : Anamalai Masani Amman Temple Kundam Festival ,Pollachi ,Kundam ,Anamalai Masani Amman Temple ,Coimbatore ,
× RELATED திண்டுக்கல் கன்னிவாடி மலைப்பகுதியில்...