- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன் பட்ஜெட்
- வைகோ
- கோயம்புத்தூர்
- மதிமுக
- பொதுச்செயலர்
- கோயம்புத்தூர் விமான நிலையம்
- யூனியன் அரசு
கோவை: ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றமசாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு இன்று காலை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒன்றிய அரசின் பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் வருவதால் அங்கு அதிக ஒதுக்கீடு செய்யபடும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமாகி உள்ளது. அமெரிக்க வரி கொடுமை இருந்து தப்பிக்க, ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஈடு கொடுக்கும் என தெரிவித்து இருக்கின்றார்கள். ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் 2027 ஏப்ரலுக்கு பின்புதான் வரும், அதுவரை ஒன்றிய அரசு எப்படி சமாளிக்க போகின்றது?
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. கோவை, கரூர், திருப்பூர் நூற்பாலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் இல்லை. ரூ.11.7 லட்சம் கோடி கடன் வாங்க போகிறோம் என்கின்றார்கள், ஆனால் 7 சதவீத வளர்ச்சியை அடைவோம் என்பது ஏற்கும் விதமாக இல்லை. கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு அறிவிப்பு இல்லை. ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை, ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது போன்ற கோஷங்கள், கோரிக்கைகள் நாங்கள் என்றைக்கும் வைக்கவே இல்லை. அப்படி கோரிக்கை வைக்கின்ற நோக்கமும் இல்லை. திமுக நிச்சயம் தனி பெரும்பான்மை பெறும். மீண்டும் 2026ல் ஸ்டாலின் முதல்வராக அமர்வார், திராவிட மாடல் ஆட்சி தொடரும்.
பாலஸ்தீனம் தனி நாடாக இந்தியா ஆதரவு அளித்து இருப்பது நல்ல விஷயம். பாலஸ்தீனத்தை நேரு காலத்தில் இருந்து இந்தியா ஆதரித்தது. இடைக்காலத்தில் நரேந்திரமோடி பொறுப்புக்கு வந்த பின்பு, இஸ்ரேலின் உறவை நெருக்கமாக்கிக் கொண்டனர். பாலஸ்தீனத்திற்காக ஐ.நா. மன்றத்திலோ, மற்ற இடங்களிலோ இந்தியா குரல் கொடுக்காமல் இருந்தது. பாலஸ்தீனம் தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கையை ஆரம்பத்திலிருந்து நாம் ஆதரித்து வந்திருக்கிறோம், எங்கள் நிலைப்பாடு அதுதான். கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்த பின்னர்தான் தொகுதிகள் குறித்து பேச முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
