×

தவெக 3ம் ஆண்டு துவக்க விழா; அதிமுக ஊழல் சக்தி: விஜய் மீண்டும் கடும் தாக்கு

துரைப்பாக்கம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் 8வது அவென்யூவில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை கட்சித் தலைவர் விஜய் தலைமையில் 3ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. முன்னதாக, இவ்விழாவுக்கு வருகை தந்த விஜய், தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியார், பெரியார், காமராஜர், அம்பேத்கர், அஞ்சலை அம்மையாரின் திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தலைமை அலுவலகத்தில தவெக கொடியை ஏற்றிவைத்து, அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் தவெக பொது செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்வாக குழுத் தலைவர் செங்கோட்டையன், இணை பொது செயலாளர் நிர்மல்குமார், துணை செயலாளர் ராஜ்மோகன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் விஜய் பேசியதாவது: தமிழ்நாட்டில் தவெக மிகப்பெரிய கட்சியாக வளர்வதற்கு நீங்கள்தான் (ரசிகர்கள்) காரணம். நீங்கள் அனைவருமே எனக்கு பக்கபலம். உங்களை நம்பி நானும் தவெக கட்சியும் இருக்கிறோம். நாம் அனைவரும் திறன்மிக்க நுட்பத்துடன், தேர்தல் மற்றும் அதிகார அரசியல் அங்கீகாரத்துக்கு, அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஆட்சி பீடத்தை கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை வெல்வோம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் மும்முனை போட்டி என்கின்றனர். இதில் நாம், மாபெரும் மக்கள் சக்தி காரணமாக தனித்து அணியாக நிற்கிறோம். மற்றொரு அணியாக திமுக கூட்டணி கட்சிகள் உள்ளன. மற்றொரு அணியாக பாஜ தலைமையில் மற்றும் சிலர் உள்ளனர். இப்படி எத்தனை சக்தி வந்தாலும், தவெகவை ஒன்றும் செய்ய முடியாது. நான் வீட்டை விட்டு வெளியே வராமல் அரசியல் செய்கிறேன் என பலர் கூறுகின்றனர். என் சார்பாக, அனைத்து வீடுகளிலும் ஒவ்வொரு விஜய் உள்ளனர் என்பதை உறுதியாக கூறமுடியும்.

நீங்கள் அனைவரும் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்து பணியாற்றி, தவெகவை அமோக வெற்றி பெறவைத்து, ஆட்சிப் பீடத்தில் அமரவைக்க வேண்டும். இங்கு எந்த டப்பா இன்ஜின் (அதிமுக-பாஜ கூட்டணி) வந்தாலும் தமிழக மக்களிடம் எடுபடாது. நாம் அடிக்கும் விசில் சத்தத்தில் அதிமுக என்ற ஊழல் சக்தி தெறித்து ஓட வேண்டும். இவ்வாறு விஜய் பேசினார். முன்னதாக, கியூஆர் கோடுடன் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே 8வது அவென்யூவில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்குள் செல்ல பவுன்சர்கள் அனுமதித்தனர். மேலும், பனையூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே பேரிகார்டு தடுப்புகள் வைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால் அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Dekka ,Vijay ,Daraipakkam ,3rd Annual Inauguration Ceremony ,Tamil ,Nadu ,Victory ,Club ,Panaiur 8th Avenue, East Coast Road, Chennai ,
× RELATED தேர்தல் நடக்கும் மாநிலங்களைக் கவர...