தஞ்சை: திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு தஞ்சையில் அளித்த பேட்டி: எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பே திமுக தேர்தல் பரப்புரை தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் நல்லபடியாக வைத்துள்ளார். திமுக கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சர். கருத்துக்கணிப்பு திமுகவுக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கிறது. செல்லும் இடங்களில் எல்லாம் முதல்வருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.
திமுக தான் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அனைவருக்கும் தெரியும். அரசின் நல திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேருகிறதா என்பதை கண்டறிந்து எங்காவது குறை இருந்தால் அதனை உடனடியாக கலெக்டர்களிடம் பேசி முதல்வர் சரி செய்து கொடுக்கிறார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஒவ்வொரு இடத்திலும் நடத்தி 20 ஆண்டு காலம், 30 ஆண்டு காலமாக நடைபெறாத பணிகள் எல்லாம் ஒரே நாளில் முடித்து தந்தது நமது முதல்வர் தான். கூட்டு பட்டா உள்ளிட்ட தீர்க்க முடியாத பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
அரசின் திட்டங்கள் முழுமையாக கிராமங்களை நோக்கி சென்று உள்ளது. திமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்து முதல்வர் தான்இறுதி முடிவு எடுப்பார். முதல்வர் கொடுக்கும் வேலையை நிறைவேற்றுவதுதான் எங்களது வேலை. கண்டிப்பாக திமுக தான் தேர்தலில் ஜெயிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
