சென்னை: பாஜ மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா சென்னையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எச்.ராஜா தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘‘பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் எங்கள் மருத்துவர் குழுவினரால் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மூலம் அவர் நன்கு குணமடைந்து வருகிறார். மேலும் குடும்பத்தினர், நண்பர்களுடன் உரையாடி வருகிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
