உடன்குடி: தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததாக பொய்யான தகவல் அளித்ததாக தவெக தலைவர் விஜய், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஆகியோர் ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென கேட்டு குரும்பூர் தொழிலதிபர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே மாவடிபண்ணையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கண்ணன் பண்ணையார். இவர் விவசாயம், செங்கல் சூளை, கல் குவாரி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவரது மகன் நிவாஸ் என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் தவெக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
அப்போது தவெக மாவட்ட செயலாளர் பிரைட்டர் தொழிலபதிபர் கண்ணன் பண்ணையாரும், அவரது மகன் நிவாஸும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் தொழிலதிபர் கண்ணன் பண்ணையார் தன் பெயரை தவறுதலாக பயன்படுத்தியதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறி தவெக தலைவர் விஜய் மற்றும் தவறான செய்தி கொடுத்த மாவட்ட செயலாளர் பிரைட்டருக்கும் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் தான் எந்தக் கட்சியையும் சாராமல் இத்தனை ஆண்டுகள் தொழில் செய்துவரும் நிலையில் தன்னை நம்பி 1000 குடும்பத்தினர் வேலை செய்து வருகின்றனர். நான் தவெகவில் இணைந்ததாக பொய்யான தகவலை செய்தியாக கொடுத்ததால் அவர்கள் கட்சியின் செல்வாக்கு உயரும் என நினைத்து தவறான செய்தியை கொடுத்துள்ளனர்.
இதனால் என் தொழில் பாதிக்கப்படுவதுடன், நான் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். எனவே எனது பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக தவெக தலைவர் விஜய், தவெக மாவட்ட செயலாளர் பிரைட்டரும் அதற்கான விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் விஜய் மற்றும் பிரைட்டர் இருவர் மீதும் மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் தொழிலதிபர் கண்ணன் பண்ணையார் தெரிவித்தார். கண்ணன் பண்ணையாரின் உடன்பிறந்த தம்பி தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
