- கோயம்புத்தூர்
- தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம்
- சூலூர்
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு…
சூலூர்: கோவையில் தனியார் நிறுவனம் தயாரித்த ராணுவத்தில் பயன்படுத்தும் ஏவுகணை லாஞ்சர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆகாஷ் என்ஜி ஏவுகணை திட்டத்திற்காக மிகவும் நுட்பமான ஏவுகணை லாஞ்சரை கோவையை சேர்ந்த மேக் கண்ட்ரோல்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் என்கின்ற தனியார் நிறுவனம் வடிவமைத்து உள்ளது. இந்த ஏவுகணை லாஞ்சர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
நீலாம்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேக் கண்ட்ரோல்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் செயல் துணை தலைவர் சுந்தரம் பேசியதாவது: தனியார் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை பரஸ்பர நம்பிக்கையுடன் இணையும்போது சாதனைகளை படைக்க முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த உதாரணம். கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக பாதுகாப்பு மற்றும் விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் தங்களது நிறுவனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது.
இந்த நிறுவனம் 13-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. ஆயுதப் படைகளுக்கு தேவையான பல உயர் தொழில்நுட்பக் கருவிகளை வெற்றிகரமாக தயாரித்து வழங்கியுள்ளதோடு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விருதையும் பெற்றுள்ளது. தற்போது தயாரித்துள்ள இந்த லாஞ்சர் பலகட்ட சோதனைகளில் பயன்படுத்தப்பட்டு வலுவான நம்பிக்கை பெற்றுள்ளது. இதற்காக இந்திய விமானப்படை மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்தும் பாராட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு திறனில் ஆகாஷ் என்ஜி ஏவுகணை திட்டம் ஒரு முக்கியமான முன்னேற்றம். இதில் பல நவீன மற்றும் தனித்துவமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த லாஞ்சர் ஏற்றுக்கொள்ளப்பட்டதை கொண்டாடும் விதமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன உயரதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தலைமை இயக்குனர் உமா மகேஸ்வரி, ராஜா, பாபு மற்றும் ஆய்வகங்களின் இயக்குனர்கள் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பொது மேலாளர்கள் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
