திருவிடைமருதூர்: மருத்துவம் சார்ந்த பாரா மெடிக்கலுக்கும் நீட் தேர்வு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமம் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மருத்துவம் சார்ந்த பாரா மெடிக்கலுக்கும் நீட் தேர்வு உண்டு என்று ஒன்றிய அரசு கொடும் செயலாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே, எம்பிபிஎஸ் படிப்பதற்கு நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்றும், அதனால் ஏழை, எளிய கிராமப்புற, நடுத்தர, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிப்பு அடைவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
நீட் தேர்வு கூடாதென பல மாநிலங்களுடைய எதிர்ப்பு குரல் எழுப்பப்பட்டு எதிர் அலையாக இருந்து கொண்டிருக்கிறது. தற்போது மருத்துவம் சார்ந்த பாரா மெடிக்கல் படிப்புக்கும், நீட் தேர்வு தேவையென சொல்லி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமம். நீட் தேர்வு இல்லாமலே பல புகழ்பெற்ற மருத்துவர்களை தந்த மாநிலம் தமிழ்நாடு. மருத்துவத்துறையில் இந்தியாவின் தலைநகரம் தமிழ்நாடு. இவ்வளவு, புகழ் பெற்ற மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மருத்துவவசதி அண்டை மாநிலங்களில் கிடையாது.
எனவே முதல் நிலையில் மருத்துவத்துறையில் தமிழ்நாடு இருக்கும்போது நீட் தேர்வு தேவையில்லாத ஒன்று. அது நீக்கப்பட வேண்டும். ஆளுநருடைய பணி துணைவேந்தர் நியமனத்தில் கூடாது என போராடி மாநில உரிமைகளை பெற்று தந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர். இந்தியை திணித்த போது இரு மொழி கொள்கைதான் என்று அண்ணாவின் கொள்கையை மீண்டும் சட்டமன்றத்தில் வலியுறுத்தியவர். எனவே, மருத்துவ படிப்பிற்கும், பாராமெடிக்கல் படிப்பிற்கும் நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழகத்தின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.
