×

தமிழகத்தில் 12,525 கிராம ஊராட்சிகளில் நீர்த்தொட்டி இயக்குவோர் ஊதியம் ரூ.5 ஆயிரமாக உயர்வு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணை: தமிழகம் முழுவதும் உள்ள 12,525 ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் வாங்கி வரும் குறைந்தபட்ச சம்பளம் ரூ.2,600 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் இதன் மூலம் பகுதிநேரப் பணியாளராகப் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியம் ரூ.5,000ஆக உயர்த்தி வழங்கப்படலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ​தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்படும் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 846 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. இதை இயக்கும் 40 ஆயிரத்து 419 பேருக்கு இந்த ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்கிய முதல்வருக்கு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் மதுரம், அகில இந்திய தலைவர் கே.கணேசன், பல்நோக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர்கள் டி.என்.பாலு, மதுரை செல்வம், கே.ஆர்.ராஜேந்திரன், மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இதுநாள் வரை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்கிற பணியாளர்களுக்கு நிதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த அரசாணையில் அது நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, கருணையுள்ளம் கொண்ட முதலமைச்சர், நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 வழங்க வேண்டும்’ என்றனர்.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு