புதுச்சேரி: புதுவை தினகரன், விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ‘வெற்றி நமதே’ பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். மக்கள் பிரச்னைகளை எடுத்துக்கூறி களத்தில் முன்நிற்கும் தமிழகத்தின் நம்பர் 1 நாளிதழான தினகரனும், சர்வதேச அரங்கில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ள வேலூர் விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று வழிகாட்டும் வகையில் கல்வி தொடர்பாக ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இதன்மூலம் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று உயர்கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை பிடித்ததுடன் தங்கள் வாழ்வில் தடம்பதித்து வருகின்றனர்.
தற்போது பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடும், கனவுகளோடும் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ- மாணவிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் தினகரன் நாளிதழும், வேலூர் விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து ‘வெற்றி நமதே’ கல்வி நிகழ்ச்சி, புதுச்சேரியில் மரப்பாலம், நூறடி சாலையில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது. தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் வரவேற்று பேசினார்.
விஐடி பல்கலைக்கழக துணை தலைவர் சங்கர் விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு `வெற்றி நமதே’ கல்வி நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்துரை வழங்கினார். கணித பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தொடர்பாக செல்வலக்ஷ்மி, வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எந்தெந்த வகையில் கிடைக்கும் என்பது குறித்து பத்மலோசனி, இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது பற்றி ஸ்ரீபிரியா, உயிரியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தொடர்பாக ஆடியப்பன், உயர்கல்வி இயற்பியல் துறை தொடர்பாக அருணை நம்பிராஜ், ஹோட்டல் மற்றும் சுற்றுலா மேலாண்மைத்துறை தொடர்பாக ஜேசு பிரெட்ரிக், வேளாண்மை துறை தொடர்பாக மோகன்ராஜ் ஆகியோர் பேசினர். தினகரன் சென்னை பதிப்பு செய்தி ஆசிரியர் எஸ்.மனோஜ்குமார் நன்றி கூறினார். ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று குறிப்புகளை எடுத்துக் கொண்டனர்.
* நம்பிக்கை இருந்தால்தான் வாழ்க்கை, தேர்வில் வெற்றி: முதல்வர் ரங்கசாமி அறிவுரை
புதுவை தினகரன்- வேலூர் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: சரியான நேரத்தில் சரியான பல்கலைக்கழகத்தை வைத்து இந்த நிகழ்ச்சியை தினகரன் நாளிதழ் நடத்துவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று. நான் தினமும் படிக்கின்ற முதல் நாளிதழ் தினகரன் நாளிதழ்தான். அதில் சில குறைகளை சுட்டிக் காட்டும்போது, அதனை நான் நிவர்த்தி செய்ய முடியும். மாணவர்கள், பொதுமக்களின் குறைகளை தெரிவிக்கின்ற நாளிதழாக புதுவையில் தினகரன் நாளிதழ் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
புதுவையில் உண்மையான நல்ல செய்திகளை கொடுக்கின்ற தினகரன் நாளிதழ் மாணவர்களுக்கான இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் அமைச்சராக இருக்கும்போதே எனக்கு நன்றாக தெரியும். இன்று அந்த பல்கலைக்கழகம் இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழகத்தில் முதல் 2 இடங்களிலும், உலகில் 8வது இடத்திலும் இருக்கிறது. மதிப்பெண் அடிப்படையில் எந்த பட்டப்படிப்பு கிடைத்தாலும், அந்த பாடத்தை ஆர்வத்தோடும், அக்கறையோடும், மகிழ்ச்சியோடும் படிக்க வேண்டும். அப்படி படித்தால் பட்டப்படிப்புக்கு ஏற்றவாறு உங்களுக்கு பணி உண்டு.
நிறைய பேர் பி.டெக்., எம்.டெக்., படிக்கிறார்கள். பிறகு வேலை கிடைக்கவில்லை என்று நினைக்கும்போது, எல்டிசி, யூசிடி தேர்வு எழுதி வெற்றிபெற்று அரசு பணியில் சேர்கிறார்கள். எடுத்த பட்டப்படிப்பில் கவனம் செலுத்தினால் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி பெறலாம். சிறந்த மனிதர்களாகவும், நிர்வாகிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் வரலாம். பல கண்டுபிடுப்புகளை கண்டுபிடித்து நாட்டிற்கு கொடுக்கலாம். நம்பிக்கை மிகவும் முக்கியமான ஒன்று. அந்த நம்பிக்கை இருந்தால் நிச்சயமாக வாழ்க்கையிலும், தேர்விலும் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
* பெற்றோர் கனவை நிறைவேற்றும் பொறுப்பு மாணவர்களுக்கு உண்டு: அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது: போட்டி நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம். நாம் போட்டி போட்டு ஜெயித்தால்தான் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ முடியும். பெற்றோர்கள் பல கனவோடு நம்மை படிக்க வைக்கிறார்கள். நிறைய பெற்றோர்கள் பிள்ளைகள் நன்றாக படித்து முன்னுக்கு வந்தால்போதும் என்ற எண்ணத்தில் சொத்தை விற்றுக்கூட பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். அப்படி இருக்கிற சூழ்நிலையில் மாணவர்களுக்கு பெற்றோரின் கனவை நிறைவேற்றுகிற கடமை, பொறுப்பு உள்ளது. இதற்கு தகுந்த மாதிரி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இங்கு கொடுக்கப்படும் ஆலோசனை கேட்டு தேர்வை தைரியமாக எழுதுவதற்கான மனப்பக்குவத்தை பெற வேண்டும். அந்த மனப்பக்குவத்தோடு தைரியமாக தேர்வு எழுதினால் நிச்சயமாக தேர்வில் வெற்றிபெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
* வினா- விடை கையேடு வழங்கல்
தினகரன்- விஐடி இணைந்து நடத்திய ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் குளிர்பானம், தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் குறிப்புகள் எடுக்க நோட் பேட், நேட்புக், பேனா ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து அவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான வினா-விடை கையேடு ‘தினகரன்’ சார்பில் வழங்கப்பட்டது. இதனை பெற்ற மாணவ, மாணவிகள் ‘தினகரன்’ நாளிதழின் இப்புத்தகம் நிச்சயம் எங்களுக்கு பயனளிக்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
* மதிய உணவுடன் இலவச பஸ் வசதி
‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இலவசமாக சுவை மிகுந்த மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் வந்து செல்லும் வகையில் பாகூர், திருபுவனை, காலாப்பட்டு பகுதியில் இருந்து தினகரன் சார்பில் இலவச பேருந்துகள் இயக்கப்பட்டது.
